உலகம்

`72 உயிர்களை பறித்த நேபாள விமான விபத்துக்கு இதுதான் காரணம்’- விசாரணைக்குழு தகவல்

webteam

கடந்த ஜனவரி 15ஆம் தேதி நேபாளத்தில் நடைபெற்ற விமான விபத்துக்கு விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள நாட்டில், கடந்த ஜனவரி 15ஆம் தேதி காத்மாண்டுவில் இருந்து 72 பயணிகளுடன் புறப்பட்ட ஏடிஆர் 72 ரக பயணிகள் விமானம், பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 68 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் என மொத்தமாக விமானத்தில் பயணம் செய்த 72 பேரும் பலியாகினர். இதில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அபிஷேக் குஷ்வாகா, பிஷால் சர்மா, அனில்குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகிய அந்த 5 இந்தியர்களும் அடக்கம். இந்த விபத்துக்கு சில நொடிகள் முன்னர் விமானத்தில் பயணித்த பயணி எடுத்த லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை அறிக்கையை 45 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு நேபாள நாட்டு பிரதமர் புஷ்பா கமல் தஹல் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, 5 பேர் கொண்ட குழு, இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் விமான விபத்துக்கு விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜின் கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் விமானியின் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.