செய்தியாளர் - கார்த்திகேயன்
கடந்த 1997-ஆம் ஆண் அன்று, பாரிஸ் நகரில் நடைபெற்ற கார் விபத்து ஒன்றில், பிரிட்டன் இளவரசி டயானா பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சமயத்தில், இந்த விபத்து மிகப்பெரிய அதிர்ச்சியை உலக அளவில் ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 1999-ஆம் ஆண்டு தி டயானா விருது அறக்கட்டளையை, பிரிட்டன் அரசு தொடங்கியிருந்தது. இளைஞர்கள் சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள் என்று, டயானா மிகுந்த நம்பிக்கையை கொண்டிருந்தார்.
இந்த நம்பிக்கையை முன்னெடுத்து செல்வதற்காகவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டு இருந்தது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு டயானா விருது வழங்கப்பட்டுள்ளது. சமூக நலப் பணிகளில் ஈடுபடும் இளம் தலைவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் கொடுமைப்படுத்துதலை தடுக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பணிகள், இந்த அறக்கட்டளையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த இந்த அறக்கட்டளை, 27 ஆண்டுகளுக்கு பிறகு பெரும் இக்கட்டான சூழ்நிலைக்கு சென்றுள்ளது.
அதாவது, தி டயானா விருது அறக்கட்டளை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி, தனது கடன்களையும், நிதிப் பொறுப்புகளையும் வழக்கம்போல நிர்வகிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது. பொதுவாக இந்த மாதிரியான நிலையை ஒரு அமைப்பு அடைந்தால், ஒரு சுயாதீன நிர்வாகி நியமிக்கப்பட்டு, அவர் அந்த நிறுவனததின் நிதி நிலையை ஆராய்ந்து, நிறுவனத்தை மீண்டும் செயல்பட வைக்க முடியுமா? என்று முடிவு செய்வார். இப்படியான ஒரு மோசமான நிலை தான், டயாவின் அறக்கட்டளைக்கும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த மோசமான நிலையால் அறக்கட்டளையின் பணிகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்கு வந்துவிட்டன என்று கூற முடியாது. அதன் எதிர்காலம் குறித்து நிர்வாக நடவடிக்கையின் முடிவுகள் தீர்மானிக்கும்.
இதுகுறித்து தனது வருத்தத்தை பதிவு செய்த இளவரசர் வில்லியம், உலகத்தை சிறந்த இடமாக மாற்றப் பாடுபடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை டயானா விருது அங்கீகரித்து ஊக்கப்படுத்தியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக இந்தப் பணியைச் சாத்தியமாக்கிய அனைவரின் அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.