பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபை கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார்.
ஐநா பொதுச்சபை கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இரவு 8 மணியவில் பிரதமர் மோடி சர்வதேச தலைவர்கள் மத்தியில் பேச உள்ளார். மோடி ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேசுவது இது 2வது முறையாகும். இதற்கு முன் 2014ம் ஆண்டும் அவர் ஐநா பொதுச் சபையில் பேசியுள்ளார். ஐநா பொதுச் சபையின் 74வது கூட்டத்தில் பிரதமர் மோடியை தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பேச உள்ளார்.
காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரம் காட்டி வரும் நிலையில் இங்கும் இம்ரான் கான் அப்பிரச்னை குறித்து பேசுவார் எனத் தெரிகிறது. எனினும் காஷ்மீர் குறித்து பிரதமரின் உரையில் எத்தகவலும் இடம் பெறாது என இந்தியா ஏற்கனவே உறுதிபடத் தெரிவித்துவிட்டது.
ஐநா பொதுச் சபை கூட்டத்திற்கு முன்னதாக பிரதமர் மோடி பெல்ஜியம், ஆர்மீனியா, நியூசிலாந்து, எஸ்தோனியா என பல நாட்டு தலைவர்களையும் சந்தித்து பேசினார். ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாவது தொடர்பாக இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாக தெரிகிறது.
இது தவிர வர்த்தகம், பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது. பிரதமர் மோடி அமெரிக்காவில் ஏற்கனவே எரிசக்தி துறை ஒப்பந்தம், ஹவுடி மோடி நிகழ்ச்சி, ஐநா சபையில் பருவ நிலை மாற்றம் குறித்த கூட்டம், மகாத்மா காந்தி அஞ்சல் தலை வெளியீட்டு விழா, தூய்மை இந்தியா திட்டத்திற்காக விருது பெறும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் கலந்து கொண்டுள்ளார். ஐநா பொதுச் சபை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் தாயகம் திரும்புகிறார்.