உலகம்

உக்ரைன் மீதான போர் எதற்கு? - ரஷ்ய நாட்டு மக்களிடம் அதிபர் புடின் உரை

JustinDurai

உக்ரைனில் ரஷ்ய படைகள் வீரதீரத்துடன் போராடி வருவதாக அந்நாட்டு அதிபர் விளாடிமீர் புடின் பொது மக்கள் மத்தியில் தோன்றி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா தொடுத்துள்ள தாக்குதல் 4ஆவது வாரமாக நீடித்து வருகிறது. இந்நிலையில் மாஸ்கோவில் உள்ள விளையாட்டு அரங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் புடின் பேசினார். உக்ரைனில் தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கு ரஷ்ய மக்கள் ஒருமித்த ஆதரவு தெரிவித்து வருவதாகவும் புடின் மகிழ்ச்சி தெரிவித்தார். இது போன்ற ஒற்றுமை உணர்வு நீண்ட காலத்திற்கு பிறகு ரஷ்யாவில் தென்பட்டுள்ளதாகவும் அவர் பேசினார்.

உண்மையான அன்பிற்காக உயிரை கொடுப்பது தொடர்பாக பைபிளில் கூறப்பட்டுள்ள ஒரு வாசகத்திற்கு உதாரணமாக உக்ரைனில் ரஷ்ய வீரர்களின் செயல்பாடு இருப்பதாகவும் புடின் பாராட்டினார். உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றியதன் நினைவு கூரும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் புடின் இவ்வாறு பேசினார். இனப்படுகொலையை தடுப்பதற்காக இந்த தாக்குதல் அவசியமாகி உள்ளதாகவும் புடின் விளக்கினார். அரங்கிற்கு வெளியேயும் உள்ளேயும் 2 லட்சம் பேர் திரண்டு புடின் பேச்சை கேட்டதாக ரஷ்ய காவல் துறை தெரிவித்தது.

எனினும் இந்த கூட்டத்திற்கு மாணவர்களும் தொழிலாளர்களும் வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டதாகவும் சில சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. புடின் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் போது அவரது உரை திடீரென நடுவில் நிறுத்தப்பட்டு பழைய காட்சிகளை ரஷ்ய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. தொழில்நுட்பக் கோளாறே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: "ரஷ்யாவுக்கு உதவினால்..." - சீனாவை எச்சரித்த அமெரிக்கா