உலகம்

ராணுவ வீரர்களுக்கு வடகொரியா அதிபர் புதிய உத்தரவு.. பதற்றத்தில் கொரிய தீபகற்ப பகுதி!

webteam

வடகொரியாவில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் உண்மையான போரை எதிர்கொள்ளும் அளவுக்கு தீவிர பயிற்சியுடன் இருக்க வேண்டும் என அதிபர் கிம் ஜாங் உன், உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏவுகணை சோதனைகள் மூலம் வல்லரசான அமெரிக்காவும் அண்டை நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வரும் வடகொரியா, உலகின் மற்ற நாடுகளிலிருந்து மாறுபட்டது. இதில் வடகொரியா நாட்டின் ரகசியங்கள் அவ்வளவு எளிதில் வெளிவருவதில்லை. அதுமட்டுமின்றி கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் அங்கே கடுமையானது என்று சொல்லப்படுவதும் உண்டு.

வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சனையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அப்படி கடந்த ஆண்டில் மட்டும் 70க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. சமீபத்தில்கூட 4 ஏவுகணை சோதனைகளை ஏவி சோதித்திருந்தது.

உலக நாடுகள் எதிர்ப்பை மீறியும் வடகொரியா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது அந்நாடு.

வடகொரியா இந்த அளவிற்கு ஏவுகணை சோதனைகளில் ஈடுபடுவதற்கு மிக முக்கியமான காரணமே தென்கொரிய நாடானது அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதுதான். தென்கொரியா -அமெரிக்கா இடையிலான போர்ப்பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வடகொரியா, ”இந்த விவகாரத்தில் ஐ.நா. தலையிட்டு அமெரிக்க - தென்கொரிய கூட்டுப் போர் பயிற்சியை உடனே நிறுத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளது.

ஆனால், அதற்கு ஐ.நா. அமைதி காப்பதால், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜாங், “அமெரிக்கப் படைகள் மற்றும் அதன் கைப்பாவை தென் கொரிய ராணுவத்தின் அமைதியற்ற ராணுவ நகர்வுகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதற்காக எந்த நேரத்திலும் விரைவான பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்க தயராக இருக்கிறோம்” என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் உண்மையான போருக்கு தயாராகும் வண்ணம் வடகொரியா ராணுவ வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று வடகொரியா, மேற்குக் கடற்கரையோரம் உள்ள நாம்போ நகர் என்ற பகுதியில் கடலை நோக்கி குறுகிய தொலைவு செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை மேற்கொண்டதாக தென்கொரியா ராணுவம் தெரிவித்து உள்ளது. இதை, அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன், தன் மகள் ஜூ ஏவுடன் சென்று பார்வையிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளன.

அப்போது அதிபர் கிம் ஜாங் உன், ”உண்மையான போரை எதிர்கொள்ளும் அளவுக்கு ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சியுடன் இருக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவும் சூழல் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

- ஜெ.பிரகாஷ்