உலகம்

நச்சுத் தாக்குதல் விவகாரம்: ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ட்ரம்ப் உத்தரவு

webteam

நச்சுத் தாக்குதல் விவகாரத்தில் 60 ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்காவில் பணியாற்றி வரும் 60 ரஷியத் தூதர்களும், உளவுத்துறை அதிகாரிகளாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் அனைவரும் அடுத்த 7 நாள்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சியாட்டி நகரில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகத்தை மூடவும், அமெரிக்காவில் நீர்மூழ்கிக் கப்பல் துறைமுகங்கள் மற்றும் போர் விமானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அருகேயுள்ள ரஷ்ய தூரதகங்களை மூடவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய் மற்றும் அவரது மகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

முன்னதாக,  பிரிட்டனில் ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய் ஸ்க்ரிபால், அவரது மகள் யூலியா ஆகியோர் கடந்த 4ஆம் தேதி நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் நச்சு வாயுவால் தாக்கப்பட்டனர். இவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரத்தில் நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்குள்ளான செர்கெய் ரஷ்யாவில்  ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ரஷ்ய உளவு அமைப்பு குறித்த தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் இருந்தார். அதன்பின் கடந்த 2010 ஆம் ஆண்டு விடுதலையானவர் பிரிட்டனுக்கு குடியேறிவிட்டார்.