உடல் பருமன் உள்ளவர்களால் உலகில் உள்ள மக்கள்தொகையின் எடை 250 கோடி கிலோ அளவிற்கு அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்ஃபோர்டின் ஆய்வறிக்கை கூறுகிறது.
உடல்பருமனால் ஏற்படும் கூடுதல் எடையானது பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் சேமித்து வைத்திருக்கும் தங்கத்தின் அளவைபோல் 700 மடங்கும், எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் எடையைவிட 70 மடங்கும், கிரேட் பைரமிட் ஆஃப் கீசாவின் எடையை விட 4 மடங்கும், அதிகம் என ஆக்ஸ்ஃபோர்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 8 கோடி பேர் உடல்பருமனுடன் இருப்பதாகவும், இது இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் தங்கத்தின் எடையைவிட 2 ஆயிரத்து 500 மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்பருமனால் ஒவ்வொரு தனிமனிதனின் ஆயுட்காலமும் குறைவதாக ஆக்ஸ்ஃபோர்டு அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, மிதமான உடல் பருமன் கொண்டவர்களின் உடல் நிறை குறியீடான BMI 30-35ஆக இருக்கும் பட்சத்தில் இவர்களின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, BMI 40 முதல் 50ஆக இருப்பவர்கள் கடுமையான உடல்பருமன் உள்ளவர்களாக கணக்கிட்டு, அவர்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் வரை குறையக்கூடும் என்றும், நோயால் பாதிக்கப்பட்டு உடல் பருமனுடன் இருப்பவர்களின் ஆயுட்காலம் 14 ஆண்டுகள் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் ஆக்ஸ்ஃபோர்டு அறிக்கை தெரிவித்துள்ளது.