உலகம்

நிறவெறியை ஒருநாளும் பொறுத்துக் கொள்ள முடியாது - போப் பிரான்சிஸ்

webteam

ஜார்ஜ் பிளாய்டுக்கு நீதி கேட்டு 8-ஆவது நாளாக அமெரிக்காவில் போராட்டங்கள் நீடிக்கின்றன. பல இடங்களில் வன்முறை ஏற்பட்ட நிலையில் ஆயிரத்து 600 ராணுவ வீரர்கள் வாஷிங்டனுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டின் படுகொலை அமெரிக்காவையே உலுக்கியுள்ளது. ஊரடங்கையும் மீறி பல நகரங்களில் மக்களின் போராட்டம் நீடிக்கிறது. நியூயார்க் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களின் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். 

ஓரிகான் மாநிலத்திலுள்ள போர்ட்லேண்டில் ஊரடங்கை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது.

இதேபோல் கலிபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள பெரிய பாலத்தின் மீது இரு கைகளையும் பின்புறம் கட்டிக்கொண்டு, குப்புறப்படுத்தப்படி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்நகரமே ஸ்தம்பித்தது. மேலும் தரையில் படுத்துக் கொண்டு, ஜார்ஜ் ஃப்ளாய்டு இறுதியாக கூறிய என்னால் மூச்சுவிட முடியவில்லை என்ற வாசகத்தை தொடர்ந்து முழங்கினர். 

பிலடெல்பியாவில் போராட்டக்காரர்கள் 9 நிமிடங்கள் மவுனமாக நின்று ஜார்ஜ் பிளாய்டுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே 1,600 ராணுவ வீரர்கள் வாஷிங்டன் டிசி-க்கு அனுப்பப்பட்டுள்ளதாக ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. இதனிடையே, வன்முறைகளை கைவிடுங்கள் என ஜார்ஜ் பிளாய்ட்டின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பல இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன. ஜார்ஜ் பிளாய்டின் சொந்த நகரமான ஹூஸ்டனில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்ற அமைதி பேரணி நடைபெற்றது. ஹூஸ்டன் நகர மேயர் சிலவெஸ்டர்ஸ் டர்னரும் இதில் கலந்து கொண்டார். 

முதன்முறையாக ஜார்ஜின் மனைவி மற்றும் 6 வயது மகள் ஆகியோர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஆசை மகள் வளர்ச்சியையும் எதிர்காலத்தையும் ஜார்ஜால் காண முடியாது என கூறி அவரது மனைவி கதறியது காண்போர் கண்களில் நீரை வர வைத்தது. இதனிடையே ஜார்ஜ் பிளாய்டின் இறப்பு துயரத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ள போப் பிரான்சிஸ், நிறவெறி மிகப்பெரிய பாவம் என தெரிவித்தார். மேலும், நிறவெறியை ஒரு போதும் பொறுத்து கொள்ள முடியாது என தெரிவித்தார்.