இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலின் பின்னணியில், ஐசன்கோட்டின் கூட்டணி மற்றும் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அரசியல் குழப்பம் நீடிக்க, புதிய அரசை அமைக்க ஐசன்கோட்டுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - M.மீரா
கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆளும் கட்சிக் கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் ராணுவத் தளபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான காடி ஐசன்கோட்டின் கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றின.
இந்நிலையில், 19 இடங்களைக் கைப்பற்றிய அரபு கட்சிகளான ஜாயிண்ட் லிஸ்ட் (Joint List) மற்றும் ராம் (Raam) ஆகியவை ஐசன்கோட்டின் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தன. இதனால் ஆட்சியமைக்கத் தேவையான 61 இடங்களைவிட இது அதிகம் என்பதால், ஐசன்கோட்டை இஸ்ரேல் அதிபர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற சபாநாயகர் தேர்தலில் அரபுக்கட்சிகளின் ஆதரவுடன் ஐசென்கோட்டின் கூட்டணி வேட்பாளர் மதன் கஹானா (Matan Kahana) வெற்றிபெற்றார். இதனால் அரபுக்கட்சிகளின் ஆதரவுடன் ஐசென்கோட் பிரதமராக விரைவில் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தச் சூழலில் நெதன்யாகுவின் லிகுட் கட்சியுடன் தொடர் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதாக ஐசன்கோட்டின் யஷார் கட்சி அறிவித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து லிகுட் கட்சிக்கும், யஷார் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் இஸ்ரேலில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது.
கடந்த நவம்பர் 22-ம் தேதி, டெல் அவிவ் அருகே உள்ள ஹெர்ஸ்லியா பகுதியில் இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதுகுறித்து இரு கட்சிகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஆட்சி அமைப்பது தொடர்பான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தங்களது நிலைப்பாடுகளை எடுத்துரைத்ததாகவும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த அரசை அமைப்பதற்கு காடி ஐசன்கோட்டுக்கு டிசம்பர் 6ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்கவும் அவருக்கு வாய்ப்புள்ளது.