உலகம்

திருடப்பட்ட எனது பைக்கை போலீஸ் பயன்படுத்துகிறார்கள் - பாகிஸ்தான் ஆசாமி விநோத புகார்!

ச. முத்துகிருஷ்ணன்

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தனது மோட்டார் சைக்கிளை தற்போது போலீஸ் பயன்படுத்தி வருவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் புகாரளித்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த இம்ரான் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது ஹோண்டா சிடி 70 பைக்கை தொலைத்து விட்டார். லாகூரில் உள்ள முகல்புரா பகுதியில் இருந்து பைக் திருடப்பட்டதாக இம்ரான் புகாரளித்து இருந்தார். அவரது புகார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டபோதும், பைக் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது இம்ரானுக்கு ஒரு இ - சலான் வழங்கப்பட்டது. அதாவது தொலைந்து போன அந்த பழைய பைக்கில் பயணிக்கும்போது போக்குவரத்து வீதிகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்ப்பட்ட சலான் வழங்கப்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இம்ரான், சலானில் விதி மீறியதாக சொல்லப்பட்ட இடத்திற்கு சென்று கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தார்.

அப்போது காவல் அதிகாரி ஒருவர் தனது பைக்கை ஓட்டி வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தலைமை சிவில் பணியாளர் அதிகாரியிடம் (சிசிபிஓ) இம்ரான் புகார் அளித்தார். அதைப் பயன்படுத்தி போலீஸ்காரர்களிடமிருந்து தனது பைக்கை மீட்டுத் தருமாறு அந்த புகாரில் இம்ரான் குறிப்பிட்டுள்ளார்.