பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் உரிமைகள் பறிப்புக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்களை ஒடுக்க பாகிஸ்தான் அரசு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ளவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். வேலைவாய்ப்பு, சிறந்த கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் அடிப்படை சிவில் உரிமைகளை மீட்டெடுக்கக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கோதுமை மாவு (Flour) போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இதற்கான மானியங்களை பாகிஸ்தான் அரசு குறைத்ததே மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணம் எனச் சொல்லப்படுகிறது. அடுத்து, இப்பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நீர் மின்சாரம் பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்குக் குறைந்த விலையில் அனுப்பப்படுகிறது. ஆனால், அப்பகுதி மக்களுக்குக் கடுமையான மின் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்தே, அவர்களுடைய போராட்டம் இன்றுடன் 22-வது நாளை எட்டியுள்ளது. இந்தத் தீவிரப் போராட்டங்களை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி ஆக்ஷன் கமிட்டி என்ற அமைப்பு ஒருங்கிணைத்து நடத்துகிறது. பாகிஸ்தான் அரசு இந்த அமைப்பிற்குத் தடை விதித்துள்ளது.
இதனால், அங்கு பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளதால், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே அப்பகுதிக்குள் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் வாகனங்கள் நுழைவதைப் பாகிஸ்தான் ராணுவம் சோதனைச் சாவடிகளில் தடுத்து நிறுத்தி வருகிறது. இதனால் அங்கு கடுமையான உணவு, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், போராட்டக்காரர்களைப் பணிய வைக்கவும், மக்கள் எழுச்சியை ஒடுக்கவும் பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் கடுமையான பொருளாதார ஒடுக்குமுறையைக் கையாண்டு வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், ”PoK-வை நீண்டகாலமாக பாகிஸ்தானின் ஒரு பகுதியாக கருத முடியாது. நாங்கள் இந்தியாவோடு வலுவான ஈடுபாட்டை கோருவோம். பாகிஸ்தான் நிர்வாகத்திலுள்ள காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. மேலும், பாகிஸ்தான் அந்தப் பகுதியைச் சார்ந்திருப்பதைவிட, அந்தப் பகுதிக்குத்தான் பாகிஸ்தானின் தேவை அதிகமாக இருக்கிறது. உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், அப்பகுதி மக்கள் உதவிக்காக இந்தியாவை நாடக்கூடும். அவ்வாறு செய்வது அப்பகுதியின் அரசியல் சூழலை மாற்றி அமைப்பதோடு, இஸ்லாமாபாத் மீதும் அழுத்தத்தை ஏற்படுத்தும்” என்கின்றனர். தவிர, ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் உதவியையும் நாடியுள்ளனர்.