இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ள நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசங்க ஆலோசனை நடத்தியுள்ளார்.
இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி பெரிய வெற்றியை பதிவுசெய்தது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கே பெரும்பான்மை உள்ளது. இதனால் புதிய அரசை நடத்திச் செல்வதில் பொதுஜன முன்னணிக்கு சில சவால்கள் உள்ளன.
இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நாடாளுமன்றத்தை கலைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இன்று நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான தீர்மானத்தை முன்னெடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். இலங்கையின் சட்டப்படி, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். இதனிடையே, ரணில் விக்கிரமசிங்க ராஜினாமா செய்தால், புதிய பிரதமராக தனது சகோதரரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சவை பிரதமராக்குவது என புதிய அதிபர் கோத்தபய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.