உலகம்

சீன அதிபரை சந்திக்கிறார் பிரதமர் மோடி

webteam

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் சி ஜிங்பெங்கை சந்திக்க உள்ளார்.

2 நாள் அரசு முறை பயணமாக வரும் 27 ஆம் தேதி சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 28ம் தேதி அதிபர் சி ஜிங்பெங்கை சந்திக்கிறார். இச்சந்திப்பு ஹுபெய் மாகாணத்தின் வுஹான் நகரத்தில் நடக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். டோக்லாம்  விவகாரத்தில் இந்தியா - சீனா இடையே கசப்புணர்வு அதிகரித்திருந்த நிலையில் இச்சந்திப்பு நடைபெறுகிறது.

மேலும் சர்வதேச அரசியல், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் அமெரிக்காவுக்கு கடும்போட்டியாக சீனா உருவெடுத்து வரும் நிலையில் இந்திய பிரதமரை சீன அதிபர் சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மோடி, பிரதமர் ஆன பின் அவர் சீனா செல்வது இது 4வது முறையாகும்.

இதனிடையே ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு சீனாவில் இன்றும் நாளையும் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்