உலகம்

ப்ரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்க உள்ள முக்கிய விஷயங்கள் என்ன?

webteam

பிரேசிலில் நடைபெறும் ப்ரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க அந்நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த ஆண்டின் ப்ரிக்ஸ் மாநாடு மற்றும் பிரதமரின் பயணத்தின் முக்கியத்துவம் குறித்த சில தகவல்கள் கிடைத்துள்ளன. 

பிரேசில் நாட்டின் பிரேசிலியா நகரில் 11ஆவது ப்ரிக்ஸ் மாநாடு 13 மற்றும் 14ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. 'புதுமையான எதிர்காலத்துக்கான பொருளாதார வளர்ச்சி' என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்த ப்ரிக்ஸ் அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் இம்மாநாடு நடத்தப்படுகிறது. பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்தித்து ஒத்துழைப்பை அதிகரித்து வருகின்றனர். உலகின் மொத்த மக்கள்தொகையில் சுமார் பாதியளவுக்கு 360 கோடி பேரை இந்த 5 நாடுகளும் கொண்டுள்ளன.

இந்த ஆண்டின் ப்ரிக்ஸ் மாநாட்டுக்கு பிரேசில் தலைமை வகிக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியில் நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர். உலக அரசியல் நிலவரம், சமூகப் பொருளாதார ஒருங்கிணைப்பு, உறுப்பு நாடுகளுக்குள் வர்த்தக வாய்ப்புகள், நெருங்கிய ஒத்துழைப்புக்கான துறைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

மின்னணு பொருளாதாரம், பன்னாட்டு குற்றங்கள் மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்பு, அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் ஒத்துழைப்பது பற்றி கூட்டம் நடைபெறவுள்ளது.

மேலும், ப்ரிக்ஸ் பிசினஸ் கவுன்சில் மற்றும் புதிய வளர்ச்சி வங்கியின் தலைவருடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ளார். ப்ரிக்ஸ் வர்த்தகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.

ப்ரிக்ஸ் நாடுகளின் உள்நாட்டு பாதுகாப்புக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து 5 நாடுகளின் தலைவர்கள் தனியாக ஆலோசிக்கவுள்ளனர்.

இதுதவிர, தனது பிரேசில் பயணத்தின்போது ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி பேச்சு நடத்தவுள்ளார்.

உலக பொருளாதார வளர்ச்சியில் 23 சதவிகித பங்கும், மக்கள்தொகையில் 42 சதவிகிதமும் கொண்ட 5 நாடுகளின் ப்ரிக்ஸ் அமைப்பு எடுக்கும் முடிவுகளை வளர்ந்த நாடுகளே உற்று நோக்கத் தொடங்கியிருக்கின்றன.