உலகம்

ருவாண்டாவுக்கு 200 பசுக்களை பரிசளித்தார் பிரதமர் மோடி

rajakannan

பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று அவர் டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்.

ருவாண்டா சென்ற பிரதமருக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் பவுல் ககமே விமான நிலையம் வந்து வரவேற்றார். ருவாண்டா சிறுமி பூங்கொந்து கொடுத்து வரவேற்றார்.

பிரதமர் மோடி தனது பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டுக்கு இந்திய நாட்டுப் பசுக்கள் 200-ஐ இன்று பரிசாக அளித்தார். அந்தப் பசுக்கள் ருவாண்டா நாட்டு சூழலில் சிறிது காலம் வளர்க்கப்பட்டு தற்போது பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

ருவாண்டா அரசு 2006ம் ஆண்டு ‘கிரிங்கா’ என்ற ‘ஒரு ஏழை வீட்டிற்கு ஒரு பசு’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் மூலம் அந்நாட்டில் 3.5 லட்சம் குடும்பங்கள் இதுவரை பயன்பெற்றுள்ளதாக அந்நாட்டு அரசு கூறுகிறது. பிரதமர் தனது பயணத்தின் போது, இந்தத் திட்டம் தொடர்பான விழாவில் பங்கேற்றார். பின்னர், ருவாண்டாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ர்விரு மாதிரி கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ருவாண்டா அதிபர் பவுல் ககமேவிடம் இந்திய நாட்டுப் பசுக்கள் 200-ஐ மோடி பரிசாக அளித்தார். 

இதனையடுத்து, ருவாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். உகாண்டா நாடாளுமன்றத்தில் இந்திய பிரதமர் ஒருவர் உரையாற்றுவது இதுவே முதன்முறை. 

உகாண்டா பயணத்தை முடித்துக்கொண்டு இறுதியாக நாளை தென்னாப்பிரிக்கா செல்லும் மோடி, பிரிக்ஸ் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்துக்குப்பின் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கையும் சந்தித்துப் பேச உள்ளார். ருவாண்டாவின் பொருளாதார மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் உதவும் பல ஒப்பந்தங்களில் சீனாவும்‌ இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளன. சீன அதிபரின் ருவாண்டா பயணம் முடிந்த அடுத்த தினமே மோடியும் அங்கு சென்றுள்ளார்.

முன்னதாக கிகலி பகுதியில் உள்ள 1994ம் ஆண்டு படுகொலையில் 2,50,000 பேர் இனப் படுகொலை செய்யப்பட்டதன் நினைவிடத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.