பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் pt web
உலகம்

பழமைவாத அரசியல் தளம்?.. ட்ரம்பின் சமூக ஊடக தளமான Truth Socialல் இணைந்த மோடி!

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சமூக ஊடக தளமான Truth Socialல் இணைந்துள்ளார்.

அங்கேஷ்வர்

பிரதமர் மோடியுடன் அமெரிக்க பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேன் நடத்திய உரையாடலின் பதிவை அதிபர் ட்ரம்ப் தன் ட்ரூத் சமூக தளத்தில் பகிர்ந்திருந்தார். இந்த உரையாடலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை மோடி வெகுவாக புகழ்ந்திருந்தார். இருவரும் சிறந்த நண்பர்கள் என்றும், ஆனால் தத்தமது நாட்டு நலனுக்கே முன்னுரிமை கொடுப்பதாகவும் மோடி பேசியிருந்தார்.

லெக்ஸ் ஃப்ரிட்மேன் உடனான பாட்காஸ்ட்டில் பிரதமர் மோடி

ட்ரம்ப்பின் தைரியத்தால், தான் மிகவும் கவரப்பட்டுள்ளதாகவும் அவர் தன் மீது வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கையால் நெகிழ்ச்சியடைந்திருப்பதாகவும் பிரதமர் பேசியிருந்தார். இதற்கிடையே இந்த உரையாடலில் தங்கள் நாட்டுடனான உறவுகள் குறித்து பிரதமர் மோடி நேர்மறையாக குறிப்பிட்டதை வரவேற்பதாக சீனா தெரிவித்திருந்தது.

இந்நிலையில்தான் பிரதமர் மோடி ட்ரம்பின் truth social தளத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பாக truth socialல் தனது முதல் பதிவை வெளியிட்டுள்ள அவர், “ட்ரூத் சோசியலில் இணைந்ததில் மகிழ்ச்சி. இங்குள்ள அனைத்து குரல்களுடனும் தொடர்பில் இருக்கவும், வரவிருக்கும் காலங்களில் அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடவும் ஆவலுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தனது பாட்காஸ்ட்டை பகிர்ந்ததற்காக ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, “எனது வாழ்க்கைப் பயணம், இந்தியாவின் நாகரிகக் கண்ணோட்டம், உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு தலைப்புகளை நான் உள்ளடக்கிப் பேசியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். இந்த தளத்தில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரை மட்டுமே பின்தொடர்கிறார். தற்போது வரை அவருக்கு 25 ஆயிரம் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோற்று, ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதன்பின், ட்ரம்ப் பதிவிட்ட சில கருத்துகள், சமூக வலைதளங்களின் விதிமுறைகளை மீறும் வகையில் இருப்பதாக கூறி அவரது ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து ஃபேஸ்புக்கிலும் அவரது கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழலில்தான் புதிய சமூக ஊடக தளத்தை உருவாக்கப்போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதனையடுத்து அவர் ட்வுட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களிலிருந்து நீக்கப்பட்டப்பட்டு 9 மாதங்களுக்குப் பொறகு ட்ரூத் சோசியல் (truth social) எனும் புதிய சமூக ஊடக தளத்தைத் தொடங்கினார். truth social என்பது ட்ரம்ப் மீடியா & டெக்னாலஜி குழுமத்திற்குச் சொந்தமானது. இந்த செயலி ஆப்பிள் ஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்ட சிறிது தினங்களுக்குள் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் முதலிடத்தைப் பிடித்தது.

சக வலதுசாரி சமூக ஊடக தளங்களான Gettr மற்றும் Parler போலவே, ட்ரூத் சோஷியல், பழமைவாத அரசியல் பேசும் தளமாக இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.