பஹல்காம் தாக்குலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம், பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதையடுத்து எல்லைகளில் தாக்குதலைத் தொடங்கிய பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இந்தியா பதிலடி கொடுத்தது. இதற்கிடையே பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. அவர்களிடம், இந்தக் குழுவினர் ஒவ்வொரு நாடுகளுக்கும் சென்று பாகிஸ்தான் பயங்கரவாதச் செயல்கள் குறித்து எடுத்துரைத்து வருகின்றனர். இந்தப் பயணத்தின் போது, அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், சிந்தனைத் தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினருடன் இந்தக் குழு கலந்துரையாடும்.
அந்த வகையில், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருக்கும் பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா தலைமையிலான குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் இடம்பெற்றுள்ளார். இந்தச் சூழலில், அவருக்கு திடீரென உடல் நலம் சரியில்லாததைத் தொடர்ந்து குவைத்தின் ராயல் ஹயாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்குச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “குவைத்தில் கடுமையான வெப்பம் என் உடல்நிலையைப் பாதித்த போதிலும், கடவுளின் கிருபையால் நான் நலமாக இருக்கிறேன். குணமடைந்து வருகிறேன். உங்கள் அக்கறை மற்றும் பிரார்த்தனைகளுக்கு அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
குலாம் நபிக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, இன்று அவரது உடல்நிலை குறித்து தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
முன்னதாக, குலாம் நபி ஆசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக பாஜக எம்.பி. பைஜயந்த் பாண்டா, "எங்கள் குழுவின் சுற்றுப்பயணத்தின் பாதியிலேயே, ஸ்ரீ @ghulamnazad மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியிருந்தது. அவர் மருத்துவ மேற்பார்வையில், நலமுடன் உள்ளார். மேலும் சில மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவார்” எனப் பதிவிட்டிருந்தார்.
ஜம்மு - காஷ்மீரில், காங்கிரஸ் கட்சியின் ஒரு முக்கிய முகமாக அறியப்பட்டவர் குலாம் நபி ஆசாத். இவர், ஜம்மு - காஷ்மீரின் முதல்வராகவும் இருந்தவர். காங்கிரஸ் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2022, ஆகஸ்ட் மாதம் அக்கட்சியை விட்டு விலகினார். பிறகு ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் என்ற கட்சியைத் தொடங்கினார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆசாத் கட்சியும் போட்டியிட்டது. ஆனால் 90 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் அக்கட்சியால் ஓர் இடத்தைக்கூட வெல்ல முடியவில்லை. இதனால் ஆசாத்தின் கட்சியின் பல தலைவர்கள் காங்கிரஸில் மீண்டும் சேர கட்சியைவிட்டு வெளியேறினர். குலாம் நபி ஆசாத் தனது கட்சியின் அனைத்து குழுக்களையும் கலைத்தார்.