அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற நாள் முதலாக, பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதில் அமெரிக்க குடியேற்றக் கொள்கையும் ஒன்று. இதன்மூலம் அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி புலம்பெயர்ந்தோரைக் கண்டுபிடித்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். இதில், இந்தியாவுக்கும் கருணை காட்டப்படவில்லை. அதன்படி, முதற்கட்டமாக 104 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கைவிலங்கு போட்டு அழைத்து வந்தது நாடு முழுவதும் எதிர்ப்பலைகளைத் தூண்டியது.
இருநாடுகளின் வர்த்தகத்தில் சிக்கலை ஏற்படுத்தாத வகையில் ட்ரம்ப் உடன் இணக்கமான உறவை கையாள வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு உள்ளது. இதையடுத்தே இத்தகைய நடவடிக்கைக்கு இந்தியாவும் உடன்பட்டது. தவிர, முன்னதாகவும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி வாஷிங்டன் செல்லவிருக்கும் பிரதமர் மோடி, அங்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்தித்துப் பேசவுள்ளார். டொனால்டு ட்ரம்ப்புடன் தனி பேச்சுவார்த்தை நடத்தும் மோடி, பின்னர் அமெரிக்கா அரசின் மூத்த அதிகாரிகளையும் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அமெரிக்க தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளையும் மோடி சந்திக்க உள்ளார்.
டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக, பிப்ரவரி 10ஆம் தேதி பிரான்ஸ் மேற்கொள்ள இருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மகாநாட்டில் கலந்து கொள்ளும் மூத்த அமெரிக்க அதிகாரிகளையும் சந்திக்க வாய்ப்பு உள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் மோடி மகாநாட்டின் முக்கிய விவாதத்துக்கு தலைமை தாங்க உள்ளனர். அதன்பிறகே அங்கிருந்து அமெரிக்கா புறப்படுகிறார் பிரதமர் மோடி.