உலகம்

சீனாவில் புகழ்பெற்ற ஏரியை சுற்றிப்பார்த்த பிரதமர் மோடி!

webteam

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸி ஜின்பின் இருவரும் பிரசித்தி பெற்ற கிழக்கு ஏரியை சுற்றிப்பார்த்தனர். 

இரண்டு நாள் பயணமாக, சீனா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஹூபே மாகாணத்தில் உள்ள ஊகான் நகரில் இருக்கும் அருங்காட்சியகத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
பிரதமருக்கு சீன பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது‌. அங்கு நடைபெற்ற கலாசார இசை நிகழ்ச்சி மற்றும் நடனத்தை இரு தலைவர்களும் ரசித்து பார்த்தனர். பின்னர் மோடியும், ஜின்பிங்கும் சிறிது நேரம் பேசினர். அப்போது பேசிய ஜின்பிங், சர்வதேச அளவில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு இந்தியா-சீனா இடையே ஆரோக்கியமான உறவு முக்கியம் என்று தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து பேசிய மோடி, இதேபோன்ற சந்திப்பு அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்திய‌ - சீனா இடையே டோக்லாம் எல்லைப் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் இருக்கும் நிலையில், மோடி - ஜி ஜின் பிங்கின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்கிடையே மோடியும் ஜி ஜின் பிங்கும் புகழ்பெற்ற கிழக்கு ஏரியை சுற்றிப்பார்த்தனர். பின்னர் ஏரிக்கரையில் இருவரும் நடந்து கொண்டே உரையாடினர்.

சீன அதிபர் ஸி ஜின்பிங் உடனான சந்திப்பு விரிவானதாகவும், பலனுள்ளதாகவும் இருந்தது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய சீன உறவை பலப்படுத்துவது, மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.