உலகம்

'சிறைவாசம் அனுபவிக்கும் விடுதலைப்புலிகள் விரைவில் விடுதலை' - இலங்கை பிரதமர் தகவல்

JustinDurai

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுவிக்கும் வகையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவுள்ளதாக இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய இலங்கை உள்நாட்டுப் போர், 2009ஆம் ஆண்டு மே 18 அன்று முடிவுக்கு வந்தது. தமிழ் ஈழம் வேண்டி போராடிய விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் மூத்த தலைவர்கள் பலரும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே 26 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த உள்நாட்டுப் போரில், எண்ணற்ற மனித உரிமை மீறல்கள் இழைக்கப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. இந்தப் போரின்போது ஏராளமான விடுதலைப் புலிகள் அமைப்பினர் பிடிக்கப்பட்டு பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்த்தனே கூறுகையில், ''ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு நிறைவேற்றும். சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இந்த 2 முக்கிய கோரிக்கைகளும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் முன்வைக்கப்பட்டன. சிறைகளில் நீண்ட காலமாக அடைப்பட்டுள்ள விடுதலைப்புலிகளை விடுதலை செய்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்குவார். பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை ரத்து செய்வதற்கான வரைவு மசோதாவுக்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டது. இது விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விடும்'' என்று கூறினார்.

இதையும் படிக்க: பிரபல மல்யுத்த வீராங்கனை சாரா லீ 30 வயதில் திடீர் மரணம்; சைனஸ் பிரச்சனை காரணமா?