வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிவிக்கும் விழாவில் ஈடுபட்ட விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவில் ஒரு தம்பதியினர் கருவில் இருக்கும் தங்கள் குழந்தை ஆணா பெண்ணா என்பதை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்க விநோதமான விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். வானில் பறக்கும் விமானத்தில் பேனர் மூலம் தங்களது குழந்தையின் பாலினத்தை அறிவிக்க வேண்டும் என முடிவுசெய்து, சிறியரக விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். விமானத்தை படகு ஒன்றில் இருந்து பெற்றோராக போகும் தம்பதியர் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிங்க் நிற புகையை கண்டதும் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அவர்கள் உற்சாகத்தில் ஆராவாரம் செய்தனர். ஆனால் அடுத்த சில வினாடிகளில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென்று கடலில் தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பைலட், கோ-பைலட் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். வானில் விமானம் பறந்து கொண்டிருக்கும்போது அதை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். விமானம் கடலில் விழுந்து நொறுங்கும்போது அந்த காட்சியும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவிவருகிறது.