flight
flight twitter
உலகம்

303 இந்தியர்கள் சென்ற விமானத்தில் ஆள்கடத்தல்? பாரீஸில் நடந்தது என்ன?

Jayashree A

பிரான்ஸ் நாட்டில் 303 இந்தியர்களுடன் சென்ற ஒரு விமானத்தில், ஆள் கடத்தல் நடந்ததாக கடந்த வாரம் வியாழன் முதல் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், விமானமானது நேற்று மும்பையில் தரையிறங்குமென தகவல்கள் வெளிவந்தன.

கடந்த வாரம் துபாயில் இருந்து ஏர் பஸ் ஏ340 லெஜண்ட் ஏர்லைன்ஸ் என்ற ரோமானிய நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தின் மூலம் சுமார் 300 இந்தியப் பயணிகள் பாரீஸின் நிகரகுவாவிற்கு பயணித்துள்ளனர். இதில் பயணம் செய்த பயணிகளில் 10 பேர் அகதிகளாகவும், மற்றும் 11 குழந்தைகள் (18 வயதுக்குட்பட்டோர்) பெரியவர்களின் துணையில்லாமல் தனியாகவும் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் 21 பேரையும் இரண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் கடத்திச்சென்றதாக அதிர்ச்சி தகவல் பரவியது. இதையடுத்து அந்த விமானமானது பாரீஸுக்கு அருகில் உள்ள வாட்ரி என்ற விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை தரையிறக்கப்பட்டது.

தொடர்ந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் பயணிகள் குறித்து, அவர்களை கூட்டிச்சென்றதாக அறியப்படும் பிரான்ஸ் நாட்டவர்கள் இருவரிடமும் பிரான்ஸ் போலீசார் முன்னிலையில், அந்நாட்டு நீதிபதி விசாரித்து வந்ததாகவும் கூறப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணிகளிடமும் விசாரணை நடந்ததாக தெரிகிறது. இந்தப் பிரச்னையில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்குத் தற்காலிக படுக்கைகள் வழங்கப்பட்டதுடன், வத்ரி விமான நிலையத்தில் அவர்களுக்கு உணவு மற்றும் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, விமானத்தில் இருந்த சிலர் கடத்தப்பட்டவர்கள் என்ற ரகசியத் தகவல் பிரானஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த நிலையில், அதைத் தொடர்ந்தே அவர்கள் இந்த விமானத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர் என சொல்லப்படுகிறது. ஏ340 விமானத்தை இயக்கும் லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம், மனித கடத்தல் போன்ற எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் சட்டப்படி ஆள் கடத்தல் விவகாரத்தில் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விமானத்தில் பயணித்த சந்தேகத்திற்கு இடமான 40 பயணிகள் முறையான ஆவணமின்றி புகலிடம் கோரி மத்திய அமெரிக்காவிற்கு செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்ற பயணிகள் சுமார் 250 பேருடன் வாத்ரி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு அவர்கள் மும்பை வந்தடைய இருக்கின்றனர் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேசி வருவதாகவும், இந்திய பயணிகளுக்கு உரிய வசதிகள் வழங்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு கடந்த சனிக்கிழமை தெரிவித்தது. மேலும், இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.