ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள ஆய்வகத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் கடுமையான நிமோனியா நோய்த்தொற்றால் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நோயின் அச்சம் காரணமாக நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
ரஷ்யாவின் இர்குட்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள இர்குட்ஸ்க் பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில்ப ணியாற்றி வந்த 28 வயதான தாரியா ஷிபிலோவா என்ற பெண் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநர், ஆய்வகத்தில் மாதிரிகளைச் சேகரிக்கும்போது உயிருள்ள பாக்டீரியா அடங்கிய சோதனைக் குழாயை தவறுதலாக உடைத்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவருக்குக் கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டன. இதனால் மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனாலேயே இச்சம்பவம் உலக அளவில் கவனத்தைப் பெற்ற நிலையில், உயிரிழந்த பெண் ஆராய்ச்சியாளருடன் நேரடி மற்றும் மறைமுகத் தொடர்பில் இருந்த 200 நபர்கள் கண்டறியப்பட்டு உடனடியாக மருத்துவக் கண்காணிப்பிலும் தனிமைப்படுத்தலிலும் வைக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள இந்த 200 நபர்களுக்கும் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் அனைத்தும் எதிர்மறையாகவே வந்துள்ளன என்றும், யாருக்கும் நோய்க்கான அறிகுறிகள் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இது ஆய்வகத்தில் பாதுகாப்பு விதியைத் தவறியதால் ஏற்பட்ட தனிப்பட்ட விபத்தே தவிர, பொதுமக்கள் மத்தியில் பரவும் கொள்ளை நோய் அல்ல என்று ரஷ்ய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், இந்த விவகாரம் பூதாகரமாய் வெடிப்பதற்குக் காரணம், இர்குட்ஸ்க் மையம் என்பது ஒரு கொள்ளைநோய் எதிர்ப்பு ஆராய்ச்சி நிறுவனமாகும்; இது குறிப்பாக அபாயகரமான தொற்று நோய்களைப் பற்றிய ஆய்வு மற்றும் கண்காணிப்புடன் தொடர்புடைய ஒரு ஆய்வகமாகும். இங்கே, உடைந்ததாகக் கூறப்பட்ட சோதனைக் குழாய் குறித்தும், ஒரு அபாயகரமான நோய்க்கிருமியைக் கையாளும்போது அந்த ஆராய்ச்சியாளருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடுமா என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
நிமோனிக் பிளேக் என்பது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் பிளேக்கின் மூன்று வடிவங்களில் ஒன்றாகும். பிளேக் நோயின் தீவிர வடிவமான 'நிமோனிக் பிளேக்' நுரையீரலை நேரடியாகப் பாதிப்பதுடன், பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதோ தும்மும்போதோ சுவாசத் துளிகள் மூலம் மனிதரிடமிருந்து மனிதருக்குக் காற்றில் எளிதில் பரவக்கூடியது. காய்ச்சல், தலைவலி, பலவீனம், மூச்சுத்திணறல், மார்பு வலி மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம். இதை, ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் வெற்றிகரமாக குணப்படுத்த முடியும் என சுகாதார அமைப்புகள் தெரிவிக்கின்றன.