உலகம்

பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே நாளில் 32 பேர் சுட்டுக்கொலை

பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே நாளில் 32 பேர் சுட்டுக்கொலை

webteam

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஒரே நாளில் 32பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 1451 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்கு திங்கட்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தினர். புலக்கான் மாகாணத்தில் நடந்த இந்த சோதனைகளின்போது போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 32 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ரோமியோ காராமட் ஜூனியர் கூறும்போது, புலக்கான் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் 67 அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 32 பேர் கொல்லப்பட்டனர். 109 பேர் கைது செய்யப்பட்டனர் என்றார்.

இந்த சோதனைகளின்போது, 200 கிராம் போதைப்பொருள், 785 கிராம் கஞ்சா மற்றும் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. ரோட்ரிகோ டுட்டர்டே கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் அதிபராக பதவி ஏற்றது முதல் இதுவரையில் 3,451 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதுதவிர போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் தொடர்புடைய 2000 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் நேரடியாக எந்தக் காரணமும் சொல்லப்படாமல் 1000 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு காவல்துறை ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.