உலகம்

பிலிப்பைன்ஸ் விமானப்படை விமான விபத்து - உயிரிழப்பு 45 ஆக அதிகரிப்பு

EllusamyKarthik

பிலிப்பைன்ஸ் விமானப்படை விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பலர், சமீபத்தில் தான் பயிற்சி முடித்து விமானப்படையில் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பிலிப்பைன்ஸ் விமானப்படைக்கு சொந்தமான C - 130 வகையைச் சேர்ந்த விமானம், 3 விமானிகள், ஐந்து சிப்பந்திகள், விமானப்படை வீரர்கள் என மொத்தம் 92 பேருடன் சுலு மாகாணத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த ஓரிடத்தில் தரையிறங்க முற்பட்டபோது விழுந்து நொறுங்கியது. அப்போது வெடித்துச்சிதறி தீப்பிடித்து எரியத் தொடங்கிய அந்த விமானத்தில், பயணித்தவர்களில் இதுவரை 45 பேர் உயிரிழந்துவிட்டதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமளிக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. விமானிகள் மூன்று பேரும் உயிர் பிழைத்துவிட்டபோதிலும், அவர்கள் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். விமானம் தீப்பிடித்து எரியத் தொடங்கியபோது பல வீரர்கள் விமானத்திலிருந்து வெளியே குதித்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர். விபத்துக்குள்ளான C - 130 ஹெர்குலிஸ் விமானம் அமெரிக்க விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு, ராணுவ உதவிக்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் பிலிப்பைன்ஸ் அரசுக்கு கொடுக்கப்பட்டது.