போதை பொருள் கடத்தல் தொடர்பாக பிலிப்பைன்ஸ் நாட்டின் மேயர் குடும்பத்தையே காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
ரோட்ரிகோ டூடெர்ட் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டி அதிபராக பதவியேற்றது முதல் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறார். பிலிப்பைன்ஸ் போலீசார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு போதைப்பொருள் ஒழிப்பை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள சுமார் 3000 அதிகாரிகளின் பெயர்களை கொண்ட ஒரு புத்தகத்தை அதிபர் தயார் செய்துள்ளார். போதைபொருள் கடத்தல்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டதும் சுடும்படி போலீசார் மற்றும் ராணுவத்தினருக்கு அவர் முழு அதிகாரம் அளித்துள்ளார்.
இந்நிலையில், தெற்கு பிலிப்பைன்ஸ் மேயரான ரெனால்டோ பரோஜினொங் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக அதிபருக்கு கிடைத்த தகவலையடுத்து அவரது வீட்டில் இன்று அதிகாலை போலீசார் சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது மேயர் சுட்டு கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். சோதனையின் போது மேயர் வீட்டில் இருந்தவர்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போலீசார் சுட்டதில் மேயர், அவர் மனைவி உட்பட 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அவர் கூறினார். ரெனால்டோ பரோஜினொங் போதைப்பொருள் கடத்தல் காரணமாக கொல்லப்படும் மூன்றாவது அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.