உலகம்

மோசூலுக்கு திரும்பிச் செல்ல மக்கள் அச்சம்

webteam

ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்து ராணுவத்தால் மீட்கப்பட்ட மோசூல் நகருக்குள் செல்ல மக்கள் அச்சமடைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக்கின் மோசூல் நகரம் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு மீண்டும் செல்வதற்கு பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மீண்டும் மோசூல் நகருக்குள் செல்ல வேண்டுமானால் முழு ராணுவப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மோசூலில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் தற்போது அருகில் உள்ள எர்பில் நகரிலும், மோசுலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் ராணுவ முகாம்களிலும் தங்கியிருக்கின்றனர்.

போரால் உருக்குலைந்து போயிருக்கும் மோசூல் நகரில் மறுகட்டுமானப் பணிகள் தொடங்கியிருக்கின்றன. முதல் கட்டமாக இடிபாடுகளை அகற்றி வாகனங்கள் செல்வதற்கான வழிகளை ஏற்படுத்துவதற்கு ராணுவம் முயற்சி செய்து வருகிறது. இறுதி யுத்தத்தில் தப்பிச் சென்ற சில நூறு பயங்கரவாதிகள் அருகில் உள்ள பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுவதால், அவர்களைக் குறிவைத்து அழிக்கும் நடவடிக்கையிலும் ராணுவம் ஈடுபட்டிருக்கிறது.