ட்ரம்ப் x page
உலகம்

பெங்குயின்கள் மட்டுமே வசிக்கும் பகுதி.. வரி விதித்த ட்ரம்ப்.. விமர்சிக்கும் பயனர்கள்!

பெங்குயின்கள் மட்டுமே வசிக்கும் பகுதிக்குக்கூட ட்ரம்ப் வரி விதித்திருப்பது இணையத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறது.

Prakash J

அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். இதன்படி இந்தியப் பொருள்களுக்கும் 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் 10% வரி ஏப்ரல் 5 முதல் நடைமுறைக்கு வரும், மீதமுள்ள 16% ஏப்ரல் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தவிர சீனா, கம்போடியா, வியட்நாம், மியான்மர், இலங்கை, வங்கதேசம், செர்பியா, தாய்லாந்து, சீனா, தைவான், பாகிஸ்தான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு 10% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் இந்த வரி விதிப்பு அறிவிப்பால் சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயமும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் ஏற்படும் அபாயமும் இருப்பதாக பொருளதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்ப், ஜேடி வான்ஸ்

இந்த நிலையில், பெங்குயின்கள் மட்டுமே வசிக்கும் பகுதிக்குக்கூட ட்ரம்ப் வரி விதித்திருப்பது இணையத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறது. ட்ரம்ப்பின் அறிவிப்பை பலர் மீம்கள் போட்டு கிண்டலடித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவை ஒட்டி அண்டார்டிகா கடல் பகுதியில் உள்ள சிறிய தீவுக்கும் ட்ரம்ப் 10% வரி விதித்துள்ளார். இங்கு பென்குயின்கள் மட்டுமே வசிப்பது குறிப்பிடத்தக்கது.

பென்குயினை இருக்கையில் அமர வைத்து ட்ரம்ப்பும் துணை அதிபர் ஜேடி வான்சும் பேச்சுவார்த்தை நடத்துவதுபோல மீம்கள் வெளியாகியுள்ளன. ட்ரம்ப்பின் அறிவிப்பை எதிர்த்து பென்குயின்கள் போராட்டம் நடத்துவது போன்றும் மீம்கள் வலைதளங்களில் களைகட்டிவருகின்றன. இது தவிர ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள 10 ஆண்டுகளாக மனிதர்களே செல்லாத பனி பிரதேசத்திற்கும் ட்ரம்ப் 10% வரி விதித்துள்ளார். பென்குயின்கள் மட்டுமே உள்ள பகுதிக்குகூட வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவுக்கு ஏன் வரி விதிக்கவில்லை என சிலர் தர்க்கரீதியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.