உலகம்

இந்தியாவை தொடர்ந்து பிரான்ஸ், ஈராக்கிலும் விஸ்வரூபம் எடுத்த 'பெகாசஸ்' உளவு சர்ச்சை

JustinDurai

பெகாசஸ் மென்பொருளை கொண்டு முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்த சர்ச்சை இந்தியா தவிர மேலும் பல நாடுகளிலும் பூதாகரமாகியுள்ள நிலையில் இது குறித்து விசாரணை நடத்த இஸ்ரேல் நாடு முடிவு செய்துள்ளது.

மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலரின் தொலைபேசிகளையும் இஸ்ரேல் நாட்டின் பெகசாஸ் என்ற மென்பொருள் கொண்டு உளவு பார்த்ததாக வெளியான செய்தி இந்திய அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா போல பிரான்ஸ், மெக்சிகோ, மொராக்கோ, ஈராக் என பல நாடுகளிலும் முக்கிய பிரமுகர்கள் இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் மென்பொருளை கொண்டு உளவு பார்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவை இஸ்ரேல் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் தலைமையிலான இக்குழு பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு நிறுவனம் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையில் இஸ்ரேல் அரசின் நடவடிக்கையை பெகாசஸ் மென்பொருளை தயாரிக்கும் என்எஸ்ஓ நிறுவனம் வரவேற்றுள்ளது. தங்கள் உளவுத் தொழில்நுட்பத்தை எந்த நாடாவது முறைகேடாக பயன்படுத்தியது குறித்து ஆதாரபூர்வ ஆவணங்கள் எதுவும் தங்களிடம் தரப்பட்டால் அது குறித்து விசாரிப்பதாக என்எஸ்ஓ நிறுவனம் தெரிவித்துள்ளது.