உலகம்

'தேங்க் யூ சயின்ஸ்' - பக்கவாத நோயாளிகளால் இனி இதையெல்லாம் செய்யலாம்

'தேங்க் யூ சயின்ஸ்' - பக்கவாத நோயாளிகளால் இனி இதையெல்லாம் செய்யலாம்

கலிலுல்லா

சுவிட்சர்லாந்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நடப்பதற்கு ஏதுவாக, செயற்கை முறையில் தண்டுவட நரம்பு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்கவாதத்தால் முடங்கியவர்கள் நடப்பது மட்டுமின்றி சைக்கிள் கூட ஓட்ட முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இருக்கையை விட்டு இனி எழுவே முடியாது என்று எண்ணிய இவர்கள் தற்போது நடப்பதற்கு விஞ்ஞானம் வழிவகை செய்துள்ளது. விபத்து மற்றும் வேறு சில காரணங்களால் தண்டுவட நரம்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு, மூளைக்கு செல்லும் சமிக்ஞை துண்டிக்கப்பட்டு இருக்கும். இதனால் அவர்களின் இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதி உணர்வற்று மாறி, செயல்படாத நிலை ஏற்படும். இது குறித்து ஆய்வு மேற்கொண்ட சுவிஸ் விஞ்ஞானிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை முறையில் தண்டுவட நரம்பை பொருத்தி அது மூளையோடு தொடர்பு கொள்வதற்கு செயற்கை நுண்ணறிவு மூலம் பயிற்சியும் வழங்கினர். அதாவது, கணிணியில் இருந்து "நட" என நாம் உத்தரவிட்டால், செயற்கை தண்டுவட நரம்பு மூளைக்கு நடக்க வேண்டும் என்று சமிக்ஞை அனுப்பும்.

செயற்கை தண்டுவட நரம்பிற்கு தொடர்ந்து பயிற்சி அளித்து வந்தால், காலப்போக்கில் சுயமாகவே சமிக்ஞை அனுப்பும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நடப்பது மட்டுமின்றி சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது போன்ற செயல்களையும் பயிற்சி மூலம் எளிதில் சாத்தியமாக்கலாம். முதற்கட்டமாக அமெரிக்காவை சேர்ந்த 70 முதல் 100 நோயாளிகளுக்கு சோதனை முறையில் செயற்கை தண்டுவட நரம்பு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக அமையும் பட்சத்தில், பக்கவாதத்தால் இருக்கை சிறையில் முடங்கியவர்கள், இனி வீறு நடை போட்டு நடப்பர்.