உலகம்

“கொரோனாவில் இருந்து தைரியமாக மீண்டேன்”: குணமடைந்த பெண் கொடுக்கும் அறிவுரை

“கொரோனாவில் இருந்து தைரியமாக மீண்டேன்”: குணமடைந்த பெண் கொடுக்கும் அறிவுரை

webteam

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட பெண் ஒருவர் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அறிவுரை வழங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1.80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். அதேசமயம் 80,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பை எதிர்க்க கைகளை கழுவுதல், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், யாருடனும் சற்று இடைவெளியுடன் இருக்க வேண்டும் என பல அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இருந்தாலும் கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகள் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மீண்ட பெண் ஒருவர் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் சியாடில் நகரத்தில் வசிக்கும் பெண் எலிசபெத் (37). சியாடில் நகரம் அமெரிக்காவில் அதிகம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். எலிசபெத், கொரோனா பாதிப்பு தனக்கு இருப்பதையும், ஆரம்பக்கட்ட பாதிப்புதான் என்பதையும் உணர்ந்துள்ளார். இவர் பயோ பொறியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உணர்ந்த பின்னர் சில எளிதான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர் தானே மீண்டு வந்துள்ளார். இதுதொடர்பாக மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ள அவர், முதலில் மக்கள் கொரோனா பாதிப்பு இருப்பதுபோல உணர்ந்தால் மற்றவர்களை விட்டு விலக வேண்டும். வீட்டிலேயே தனிமையில் இருக்க வேண்டும். பயமின்றி தனிமையில் இருந்தாலே கொரோனா விலகிவிடும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா நிபுணர்கள் மற்றும் சீன நிபுணர்கள் இடையே நடைபெற்ற காணொளி உரையாடலில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே கொரோனா வைரஸ் தீவிரமாக பாதிப்பதாகவும் கூறப்பட்டது. குறிப்பாக டையாபிடிஸ், இதயப் பிரச்னைகள் மற்றும் நுரையீரல் நோய்கள் உள்ளவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.