அமெரிக்காவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஹார்வீ புயல் அடுத்தடுத்து பல நகரங்களை தாக்கிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் தெற்கு எல்லையில் மெக்சிகோ வளைகுடாவை ஒட்டி அமைந்திருக்கிறது டெக்சாஸ் மாநிலம். கடந்த வாரம் மெக்சிகோ வளைகுடாவில் இருந்து நகர்ந்து வந்த ஹார்வீ புயல், டெக்சாஸ் மாநிலத்தின் கரையோரப் பகுதிகளைத் தாக்கியது. மணிக்கு சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலுடன் கனமழையும் கொட்டியது. கரையோர நகரான விக்டோரியா முதலில் பாதிப்புக்குள்ளானது.
இதைத் தொடர்ந்து ஹார்வீ புயலானது மீண்டும் மெக்சிகோ வளைகுடாவுக்குள் வந்து ஹூஸ்டன் நகரை நோக்கிச் சென்றது. ஏற்கெனவே கனமழை பெய்து கொண்டிருக்கும் ஹூஸ்டன் நகரில் நாளை முதல் மேலும் அதிகமான மழை பெய்யக்கூடும் எனக் கருதப்படுகிறது. அடுத்தடுத்த நாள்களில் ஹன்ஸ்விலி, ஸிரீவ்போர்ட் ஆகிய நகரங்களை நோக்கி ஹார்வீ புயல் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெக்ஸாஸ் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் கனமழை பெய்யும் என்று அரசு எச்சரித்திருக்கிறது.