உலகம்

விமானத்தில் பாய்ந்த துப்பாக்கிக்குண்டு: பயணி படுகாயம் - நடுவானில் அதிர்ச்சி சம்பவம்

JustinDurai

மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு நபர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் வழக்கம்போல பயணிகளை ஏற்றிக் கொண்டு மியான்மர் வான்வழியில் பறந்துக் கொண்டிருந்தது. அந்த விமானம் 3,500 அடி உயரத்தில் சென்று கொண்டு இருந்தது. விமானம் தரையிறங்க வேண்டிய விமான நிலையத்திலிருந்து 4 மைல் தொலைவில் வந்து இருந்தது. இதனால் விமானி மெல்ல உயரத்தைக் குறைத்துக் கொண்டு வந்தார். அப்போது திடீரென அதில் பயணித்த பயணி ஒருவர் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. நடுவானில் இந்தச் சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முதலில் பயணிகளில் யாராவது துப்பாக்கியை மறைத்து வந்து துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டாரா என்று சோதித்து உள்ளனர். ஆனால் சோதனையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. பின்னர் விமானத்தை சோதனை செய்து பார்த்தபோதுதான் தரையில் இருந்து சுடப்பட்ட துப்பாக்கிக் குண்டு விமானத்தைத் தாக்கியதை பாதுகாப்புப்படையினர் கண்டுபிடித்தனர். விமானத்தைத் துளைத்துக் கொண்டு அந்த குண்டு பயணியைத் தாக்கி உள்ளது. நல்வாய்ப்பாக  விமான நிலையம் அருகில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததால் சில நிமிடங்களிலேயே விமானம் தரையிறங்கியது. இதையடுத்து காயமடைந்திருந்த பயணி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மியான்மரில் கடந்த ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டது. தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று கூறி அங்கிருந்த மக்களாட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவத்தினர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். பல மாதங்களாக அங்கு ராணுவ ஆட்சியை நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிப் படைகள் அவ்வப்போது சிறுசிறு தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கயா மாநிலத்தில் உள்ள கிளர்ச்சிப் படைகள்தான் விமானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாக மியான்மர் இராணுவத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஆனால் கிளர்ச்சிக் குழுக்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளன.

இதையும் படிக்க: இந்தோனேசியாவில் கால்பந்தாட்ட மைதானத்தில் வன்முறை: 127 பேர் உயிரிழப்பு