செய்தியாளர்: பாலவெற்றிவேல்
விச்சிட்டா நகரில் இருந்து புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சுமார் 60 பேருடன் புறப்பட்ட விமானம், அமெரிக்க ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் மோதியதில், இரண்டும் போடோமாக் ஆற்றில் விழுந்தன. நேற்று இரவு 9 மணியளவில் வானில் மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெலிகாப்டரில் மூன்று ராணுவ வீரர்கள் பயணித்திருந்தனர். இந்த விபத்தில் இருந்து நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் நிலைகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் 18 பேர் இதுவரை இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. வாஷிங்டன் நகர மேயர் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்க வான்வழி நிர்வாகம் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) இந்த விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றன.
இந்த சம்பவம் விமானப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு முறைமைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
அமெரிக்காவின் ரொனால்ட் ரீகன் வாஷிங்டன் தேசிய விமான நிலையம் அருகே நடந்த விமான விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 2023 ஆம் வருடம் கலிபோர்னியாவில் கடைசியாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.