உலகம்

“போலீஸ்.. போலீஸ்” கடத்தல் கும்பலை காப்பாற்றிய ‘கிளி’ கைது

webteam

பிரேசிலில் போதை மருந்து கடத்தல் கும்பலுக்கு உதவிய கிளியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு பிரேசிலின் பியாயுயி மாகாணத்தின் விலா இர்மா டுல்சி என்ற இடத்தில் வாழும் ஒரு சமூகத்தினர் போதை மருந்து கடத்தல் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களைப் பிடிக்க போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இவர்களை ஒவ்வொரு முறை போலீசார் பிடிக்கப் போகும் போதும் தப்பித்து சென்றுவிடுவது வழக்கமாக இருந்தது.

அதேபோல் இந்த முறையும் அவர்கள் தப்பித்து சென்றுவிட்டனர். அதற்கு காரணம் ஒரு கிளி. அதாவது போலீசார் வந்தால் உடனே இந்தக் கிளி ‘போலீஸ் போலீஸ்’ என்று கத்தி சிக்னல் கொடுக்குமாறு அவர்கள் அந்த கிளியை பழக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் போதை மருந்து விற்கும் இடத்துக்கு சென்ற போலீஸார் முதலில் அந்த கிளியை கைது செய்து விசாரணை செய்தனர். ஆனால் போலீஸாருக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. கிளி போலீசார் கேட்ட எந்த கேள்விக்கும் வாயைத் திறக்கவில்லை. இதையடுத்து அந்த கிளியை உள்ளூர் விலங்கு காட்சி சாலையில் விட்டு 3 மாதங்களுக்கு பிறகு ரிலீஸ் செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.