சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம். சூரியனின் புறப்பரப்பை ஆய்வு செய்யும் இந்த விண்கலத்தை அமெரிக்காவின் நாசா அமைப்பு விண்வெளியில் ஏவயுள்ளது.
சூரியனைப் பற்றிய ஆய்வில் பல முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தற்போது சூரியனின் கொரானோ பகுதியில் உள்ள காந்தப் புலன்களின் வடிவமைப்பை ஆய்வு செய்யும் விதமாக புதிய விண்கலத்தை அனுப்ப உள்ளது நாசா. மனிதனால் தயாரிக்கப்பட்டதிலேயே மிக அதிகமான வேகத்தில் செல்லும் அடிப்படையில் இந்த விண்கலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த விண்கலத்தை விண்வெளியில் ஏவபட்டதன் பிறகு புதிய மைல்கல்லாக அமையும்.
நாம் வாழும் சூரிய மண்டலத்தின் ஆதாரமான மைய நட்சத்திரம் சூரியன். கச்சிதமான கோள வடிவத்தில் உள்ள சூரியன், பூமியைப் போல 109 மடங்கு விட்டம் கொண்டது. சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் மொத்த எடையில் 99.86 சதவீதம் சூரியனுடைதுதான். ஹைட்ரஜன் அணுக்கரு இணைவு மூலம் சக்தியைப் பெறும் சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ். சூரியனைச் சுற்றி பல கோடி கிலோமீட்டர் தூரத்துக்கு கொரோனோ எனப்படும் மின்னூட்டமும் அதிக வெப்பநிலையும் கொண்ட மண்டலம் உள்ளது. இது பல லட்சம் டிகிரி வெப்பநிலையைக் கொண்டது. இவை தவிர இன்னும் அறிந்து கொள்ளப்படாத பல ஆச்சரியங்களைக் கொண்டது நமது சூரியன்.
சூரியனை ஆய்வு செய்வதற்கான பல முயற்சிகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 1959 முதல் 1968 வரை அமெரிக்காவின் நாசா அமைப்பு பயனியர் விண்கலங்களை முதன் முதலாக அனுப்பியது. இதன் பிறகும் பல செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. பெரும்பாலான செயற்கைக்கோள்களின் பணிகள் சூரியனின் க்ரோனா பகுதியை ஆய்வு செய்வதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. 2006-ம் ஆண்டு க்ரோனா பகுதியை ஆய்வு செய்யும் வகையில் STEREO என்ற திட்டப்படி இரு செயற்கைக்கோள்களை நாசா அனுப்பியது. பூமியில் இருந்து தெளிவாகத் தெரியாத சூரியனின் பல அம்சங்களை இந்தச் செயற்கைக் கோள்கள் படமெடுத்து அனுப்பி வருகின்றன. Coronal mass ejection என்று கூறப்படும் சூரியனில் இருந்து அதிக வெப்பம் உமிழப்படும் நிகழ்வையும் இந்தச் செயற்கைக்கோள்கள் ஆய்வு செய்தன.
வரும் 2020-ஆம் ஆண்டில் சூரியனின் க்ரோனாவை ஆய்வு செய்ய இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு ஆதித்யா என்று செயற்கைக்கோளை அனுப்ப இருக்கிறது. இந்த வரிசையில் சூரியனின் கொரோனோ பகுதிக்குள் பயணம் செய்யும் வகையிலான ஒரு விண்கலத்தை நாசா அனுப்ப இருக்கிறது. இதன் பெயர் பார்க்கர் சோலார் ப்ரோப். இதன் முந்தைய பெயர் சோலார் ப்ரோப் பிளஸ். புகழ்பெற்ற விஞ்ஞானி யூஜின் பார்க்கரின் பெயரே இந்த விண்கலத்துக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. இவர்தான் சூரியப் புயல் இருப்பதை கண்டறிந்து கூறியவர். நாசாவின் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதரின் பெயரை விண்கலத்துக்குச் சூட்டுவது இதுவே முதல் முறையாகும்.
சூரியனைச் சுற்றியுள்ள கடுமையான வெப்பத்தைத் தாங்கும் வகையில் இந்த விண்கலம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சூரியனுக்கு மிக அருகே சென்று ஆய்வு செய்வது இந்த விண்கலத்தின் சிறப்பு. இதற்காக விண்கலத்தின் முன்புறத்தில் வெப்பநிலை தடுப்பு பொருத்தப்படுகிறது. மிகக் கடினமான பொருளான Reinforced carbon மூலம் இந்தத் தடுப்பு தயாரிக்கப்படுகிறது. மிக முக்கியமான கருவிகள் அனைத்தும் இதன் நிழலில் அமைக்கப்படுகின்றன. இதனால் சுமார் ஆயிரத்து முந்நூறு டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் இந்த விண்கலம் தாங்கிக் கொள்ளும்.
சூரியனின் கொரோனா பகுதியில் உள்ள காந்தப் புலங்களின் வடிவமைப்பை ஆய்வு செய்வது இந்த விண்கலத்தின் முக்கியப் பணி. சூரியனின் மேற்பரப்பைவிட அதற்கு மேல் உள்ள புறவடுக்கு மண்டல் அதிக வெப்பமாக இருப்பது ஏன் என்ற கேள்விக்கும் இந்த விண்கலம் விடையளிக்கும். பூமியில் இருந்து சுமார் 14 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபடி, சூரியனைப் பற்றி தகவல்களை நாசாவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். SOLAR WIND எனப்படும் சூரியக் காற்றின் அடிப்படையை இதன் மூலம் தெரிந்துக் கொள்ள முடியும். சூரியனுக்கு அருகே நெருங்கும்போது, இந்த விண்கலத்தின் வேகம் நொடிக்கு 200 கிலோமீட்டராக இருக்கும். அது நடந்தால், மனிதனால் தயாரிக்கப்பட்டதிலேயே மிக வேகமாகச் செல்லும் பொருள் என்ற பெருமையை பார்க்கர் சோலார் ப்ரோப் பெறும் .
சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு நடத்தும் பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலத்தை தயாரிக்கும் பணிகளை நாசா தீவிரப்படுத்தியுள்ளது. கார் அளவில் உருவாக்கப்படும் இந்த விண்கலம், சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு நடத்தும் என சொல்லப்படுகிறது. இதுவரை மனிதர்கள் உருவாக்கியதிலேயே சூரியனுக்கு மிக அருகில் செல்லும் பொருளாக இது இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.