பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள உலகப்புகழ் பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமான லூவ்ரே அருங்காட்சியகம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது. இது சுமார் 6,52,300 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த அருட்காட்சியகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பொருட்கள், ஓவியங்கள் உட்பட 33,000க்கும் மேற்பட்ட கலைப் பொருள்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. உலகிலேயே அதிகம் பார்வையிடப்படும் இந்த அருங்காட்சியகத்தில், நாள் ஒன்றுக்கு 30,000 பார்வையாளர்கள் வந்து செய்கின்றனர். இங்குள்ள அரிய பொக்கிசங்களை திருடர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் அருங்காட்சியகத்திலிருந்து பேரரசர் நெப்போலியன் மற்றும் அவரது மனைவி பயன்படுத்திய 9 தங்க ஆபரணங்கள் கொள்ளை போயுள்ளதாக, பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கண்ணாடி கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து, திருட்டை அரங்கேற்றியதாக தெரிகிறது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, கிரீடங்கள், கழுத்தணிகள், காதணிகள் மற்றும் ப்ரூச்கள் உட்பட எட்டு பொருட்கள் கொள்ளையடுக்கப்பட்டுள்ளன. அனைத்தும் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை, ஒருகாலத்தில் பிரெஞ்சு அரச குடும்பம் அல்லது ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்குச் சொந்தமானவையாகும்.
கொள்ளையர்கள் ஹைட்ராலிக் ஏணியைப் பயன்படுத்தி அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து விலைமதிப்பற்ற நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் கூறினார். இது மிகப்பெரிய கொள்ளை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு கட்டர் மூலம் ஜன்னல் கண்ணாடிகளை வெட்டி உள்ளே நுழைந்த அவர்கள் 7 நிமிடங்களில் இதை செய்து முடித்துள்ளனர் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் ஒரு கிரீடத்தை அவர்கள் தவறவிட்டுச் சென்றுள்ளனர். அதைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
உலகப்புகழ் பெற்ற லூவர் அருங்காட்சியகத்தில், பல்வேறு ஆண்டுகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 1911ஆம் ஆண்டு, பிரசித்தி பெற்ற மோனாலிசா ஓவியம் திருடப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டது. 1976ஆம் ஆண்டு, மன்னர் 10ஆம் சார்லஸின் வைரம் பதித்த வாள் திருடப்பட்டது. 1983ஆம் ஆண்டு, ஐரோப்பிய மறுமலர்ச்சி கால கவசங்கள் திருடப்பட்ட நிலையில், அவை 2011ஆம் ஆண்டு மீட்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு, கேமில் கோரோட் என்பவர் வரைந்த லே செமின் டி செவ்ரேஸ் வரைந்த ஒவியம் திருடப்பட்டது. அது இன்றுவரை கண்டுபிடிக்கவில்லை. 1990ஆம் ஆண்டு, பியர் அகஸ்டே ரெனோயர் வரைந்த ஓவியம் களவுபோன நிலையில், இன்றுவரை கண்டறியப்படவில்லை.