உலகம்

”இனி குழந்தைகளின் ஃபோட்டோக்களை பகிர பெற்றோருக்கு உரிமையில்லை..” - எங்கு தெரியுமா?

JananiGovindhan

குழந்தைகளின் தனியுரிமையை காக்கும் பொருட்டு பிரான்ஸ் அரசு முக்கியமான சட்டத்துக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் குழந்தைகளின் ஃபோட்டோ மற்றும் வீடியோக்களை அவர்களது பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் பகிர்வதை தடுக்க வழி வகுப்பதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைக்கும் வழிவகை செய்துள்ளது.

இந்த மசோதாவை புரூனோ ஸ்டூடெர் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் முன்மொழிந்தார். அதில், “பெற்றோருக்கான அதிகாரம் குறித்தும், இளைஞர்கள் உள்ளிட்ட சிறார்களின் ஃபோட்டோ வீடியோவை அவர்களது அனுமதியின்றி சமூக வலைதளங்களில் பகிர்வதற்கு பெற்றோர்களுக்கு உரிமையில்லை என்பதை உணர்த்துவதற்காகவே இந்த சட்டம் ஏற்படுத்தப்பட இருக்கிறது” என்றார். இதனையடுத்து பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் ஒருமனதாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து எம்.பி புரூனோவின் பேச்சில், “13 வயதுடைய சிறுவனிடம் 1,300க்கும் மேலான அவரின் புகைப்படங்கள் இருக்கின்றன. இது மிக எளிதில் சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. இதுப்போன்ற புகைப்படங்கள் ஆபாச இணையதளங்களில் பயன்படுத்தப்பட்டும், பள்ளி சூழலில் கொடுமைகளுக்கு ஆளாகவும் செய்கிறது. இதுபோக ஆபாச தளங்களில் இருக்கும் 50 சதவிகிதத்துக்கும் மேலான புகைப்படங்களெல்லாம் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளின் படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதாகவே இருக்கின்றன.

பெற்றோருக்கான அதிகாரத்தில் குழந்தைகளின் தனியுரிமையை பாதுகாப்பதை முக்கியமான பொறுப்பாக நிறுவுவதை நோக்கமாக கொள்ளவேண்டும் என்பதே இந்த மசோதாவின் முதல் இரண்டு பிரிவுகளும் கொண்டுள்ளன.” என்று தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் நிறுவப்பட்ட குழந்தைகள் உரிமைகளுக்கான பிரிதிநிதி குழுவில் உறுப்பினராகவும் உள்ளார் புரூனோ ஸ்டூடெர்.

பிரான்ஸ் அரசின் இந்த புதிய சட்டத்துக்கு சில நிபுணர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மற்றவர்கள் இது குறித்த விவாதங்களையும் முன் வைத்திருக்கிறார்கள். குறிப்பாக பெற்றோர் மற்றும் டிஜிட்டல் கல்வி கண்காணிப்பக நிறுவனத்தின் இயக்குநரும் நிறுவனருமான தாமஸ் ரோஹ்மர், “பிரான்ஸ் அரசின் இந்த புதிய சட்டம் போட்டோ உரிமையை பேசுகிறதே தவிர, குழந்தைகளின் கண்ணியத்தை பற்றியல்ல. ஏனெனில் parent influencers ஆக இருக்கக் கூடியவர்கள் குழந்தைகளுக்கு ஊட்டி விடுவதை வைத்து வாழ்க்கையில் சம்பாதித்து வருகிறார்கள். இதுதான் அவமானமான ஒன்று” என சாடியிருக்கிறார்.

அதேபோல, உளவியலாளரான வனேசா லாலோ, “குழந்தைகளை பயமுறுத்தவும், கேலி செய்யவும் நிகழ்த்தும் செயல்களால் அவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் மீது நம்பிக்கையின்மை உணர்வை ஏற்படுத்தவே வழி வகுக்கும். ஆனால் இந்த சட்டத்தால் குழந்தைகளின் தனியுரிமை பாதுகாப்பதோடு, ஆன்லைனில் அவர்களுக்கான கண்ணியத்தையும் மேம்படுத்துவதற்கு ஒரு படியாக இருக்கும்.” என்றார்.