செய்தியாளர் - ராஜ்குமார்.ர
சவூதி அரேபியா என்றாலே இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களான மக்கா, மதீனா, எண்ணெய் வளம், வளைகுடா நாடுகள் எனப் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். ஆனால், தற்போது சவூதி அரேபியாவைச் சுற்றி அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், “சவூதி அரேபியாவுக்காக... எந்த எல்லைக்கும் செல்வோம்!” என பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு, தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
சவூதி அரேபியாவுக்கும், யேமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்புக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களில் சவூதியை நோக்கி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவையும் ஹவுதிகள் ட்ரோன் மூலம் தாக்க முயன்றதாகவும், அதனை சவூதி வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், மக்கா அல்லது வேறு எந்த இஸ்லாமியப் புனிதத் தலத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறப்படும் தகவல்களை ஹவுதிகள் மறுத்துள்ளனர். இந்நிலையில், ஹவுதிகளுக்கு எதிரான போரில் உதவுமாறு சவூதி அரேபியா கோரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மெக்கா ஒப்பந்தத்தில் இணைந்துள்ள துருக்கியும், பாகிஸ்தானும் உதவ முன்வரவில்லை என்றும், அமெரிக்காவும் இந்தப் போரில் நேரடியாக ஈடுபடாமல் விலகி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில், சவூதி அரேபியாவைப் பாதுகாப்பதற்காகத் தேவையான எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளரும், ISPR தலைமை இயக்குநருமான லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சௌத்ரி, அந்நாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.
“ராஜதந்திர ரீதியாக மட்டுமல்ல... கள ரீதியாகவும் சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் முழுமையாகத் துணை நிற்கிறது. சவூதி சகோதரர்கள் கேட்கும் மற்றும் தேவைப்படும் எந்த எல்லைக்கும் நாங்கள் செல்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சவூதி அரேபியாவின் பாதுகாப்புக்கான பாகிஸ்தானின் அர்ப்பணிப்பு நிபந்தனையற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், ஹவுதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் நேரடியாக ராணுவ உதவி செய்யுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதுகுறித்து பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் சௌத்ரி, மக்கா மற்றும் மதீனாவைக் குறிப்பிட்டு, இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களையும் சவூதி அரேபியாவையும் பாதுகாப்பதற்கான பாகிஸ்தானின் உறுதி தொடர்ந்து இருக்கும் என தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவின் பாதுகாப்பு தொடர்பாக பாகிஸ்தான் இவ்வளவு வலுவான உறுதியை வெளிப்படுத்தியிருப்பது, தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.