பாகிஸ்தானில் சமீப சட்ட மாற்றங்களால் அணு ஆயுத கட்டுப்பாடு சிவில் அரசிலிருந்து ராணுவத் தளபதி ஆசிம் முனீரின் கைகளுக்கு மாறியது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. NSC என்ற புதிய அமைப்பின் மூலம் ராணுவம் நேரடி கட்டுப்பாட்டைப் பெற்றுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக கடுமையான கருத்துகள் கூறி வரும் ஆசிம் முனீரின் அதிகார உயர்வு, அணு ஆயுதப் போரின் அபாயத்தை அதிகரிக்கிறது.
பாகிஸ்தானில் பல முறை ராணுவ தளபதிகள் புரட்சி மூலம் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அப்படி ஒரு நிலை வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அந்நாட்டின் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் ராணுவத்தின் பங்கு இருந்ததாக விமர்சனம் எழுந்தது.
மேலும் அடுத்த வந்த புதிய ஆட்சியாளர்கள் ராணுவத்துக்கும், ராணுவ தளபதிக்கும் அதிக அதிகாரங்களை கொடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக பாகிஸ்தான் ராணுவத்தளபதி அசிம் முனீரின் அதிகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது பாகிஸ்தானின் அணுஆயுதக் கட்டுப்பாட்டு அதிகாரங்கள் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தங்களின் படி ராணுவத் தளபதி ஆசிம் முனீர் முப்படைகளுக்கும் சுப்ரீம் கமாண்டராகக் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
அதோடு, முன்பு பிரதமரின் தலைமையின் கீழ் இருந்த NCA என அழைக்கப்படும் 'தேசிய கட்டளை அமைப்புக்கு மாற்றாக NSC என அழைக்கப்படும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு, அணுஆயுதங்களை நிர்வகிக்கும் நேரடி செயல்பாட்டு அதிகாரம் அதன் கீழ் கொண்டுவரப்பட்டது. அதோடு இந்த NSC அமைப்பின் தலைமை பதவி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அணு ஆயுதங்களை இயக்கும் அதிகாரம் ராணுவத்தின் வசம் சென்றுள்ளது.
வழக்கமாக அணு ஆயுதத்தின் கட்டுப்பாடு, அந்தந்த நாட்டின் சிவில் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். அதற்கு மாறாக அணுஆயுதக் கட்டுப்பாடு, பாகிஸ்தானில் ராணுவத்தின் கைகளுக்கு சென்றுள்ளது உலகுக்கே பெரும் அச்சறுத்தலாக மாறியுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் இந்தியாவுக்கு எதிரானக் கடுமையான கருத்துகளையும், அணுஆயுத எச்சரிக்கைகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அணுஆயுதங்களை இயக்கும் அதிகாரம் முழுமையாக ராணுவத்திடம் குவிவது இந்தியாவுக்கான ஆபத்தை அதிகரிக்கும் என்று இந்தியப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.