பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக அந்நாட்டைச் சார்ந்த விண்வெளி வீரர் ஒருவர் சீன விண்கலம் மூலம், வரும் நவம்பர் 25-ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1961-ம் SUPARCO எனப்படும் பாகிஸ்தானின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டிருந்த போதிலும், ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைல்கல் எட்டப்படவுள்ளது. இதன்மூலம், விண்வெளிக்கு சென்றவர்களைக் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் இணையவிருக்கிறது.
இதுகுறித்தான அறிவிப்பை, அந்நாட்டின் சிறப்பு முயற்சிகள் துறை அமைச்சர் அஹ்சன் இக்பால் வெளியிட்டுள்ளார். இந்த விண்வெளித் திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜீஷான் அலி மற்றும் குர்ரம் தாவூத் ஆகிய இரண்டு விமானிகளும், சீனாவின் பெய்ஜிங்கில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் ஒருவர் இந்த விண்வெளிப் பயணத்திற்காகத் தேர்வு செய்யப்படவுள்ளார். இந்தப் பயணத்தில் விண்வெளிக்குச் செல்லும் வீரர், விண்கலத்தை இயக்குவதற்குப் பதிலாக, விண்வெளியில் பாகிஸ்தான் சார்பிலான அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தான், சீனக் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையத்தின் (ILRS) உதவியுடன் வரும் 2035-க்குள் நிலவில் விண்கலத்தைத் தரை இறக்க (Lunar Landing) இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.