பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தானின் வான்நிலையம் ஒன்றைத் தகர்த்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் நேற்று இரவு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் இருக்கும் சில பகுதிகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை நடத்திப் போரைத் தொடங்கியது. இதையடுத்து, இந்தியா அவற்றை இடையிலேயே வழிமறித்து அழித்து வருவதுடன், பாகிஸ்தானுக்குத் தொடர்ந்து பதிலடியும் கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் எதிர்க்கட்சி எம்.பியான ஷாகித் அகமது அந்நாட்டு பிரதமரை கடுமையாகச் சாடியுள்ளார். அதிலும், அந்த எம்.பி. பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற அவைக்குள்ளேயே அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஒரு கோழை எனச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர், “இந்தியாவுக்கு எதிராக ஒரு கருத்தும் இதுவரை வரவில்லை. அரசு தைரியமாகச் சண்டையிடும் என எல்லையில் ராணுவ வீரர்கள் நிற்கின்றனர். ஆனால், ஒரு இராணுவம் ஒரு கழுகால் வழிநடத்தப்பட்டால், அது போரில் தோற்கிறது. இந்திய பிரதமர் மோடியின் பெயரைக்கூட உச்சரிக்க முடியாத அளவுக்கு உங்கள் தலைவர் ஒரு கோழைத்தனமானவர். எல்லையில் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி, பல லைக்குகளையும் கருத்துகளையும் பெற்று வருகிறது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பொதுமக்களின் கவனத்திற்கு ஆளாவது இது முதல்முறையல்ல. சமீபத்தில், பாகிஸ்தானுக்குள் இந்தியா பல இலக்குகளைத் தாக்கிய பிறகு, செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஷெரீப், அந்நாட்டுப் பொதுமக்களால் கேலி செய்யப்பட்டார். இணையவாசிகள் பலர், அவரது பலவீனமான தோற்றத்தையும் உடல் மொழியையும் கேலி பதிவுகளை வெளியிட்டனர்.