UAE ANI
உலகம்

இந்தியர்களுக்கு மட்டும் மரியாதை; எங்களைக் கண்டுகொள்ளவே இல்லை! - புலம்பும் பாகிஸ்தான் எம்.பி.

இந்தியர்களுக்கு மட்டும் உரிய மரியாதை வழங்கப்பட்டதாகவும், தங்களைக் கண்டுகொள்ளாமல் அவமதித்ததாகவும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ஒருவர் தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

PT WEB

பாகிஸ்தான் நாட்டின் எதிர்க்கட்சியான பிடிஐ கட்சியைச் சேர்ந்த ஆசாத் கைசர், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். அவர், சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் பயணம் செய்ய இருந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாகவும், அந்தச் சூழலில் பாகிஸ்தானியர்கள் அவமதிக்கப்பட்டதாகவும், இந்தியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் மட்டுமே உரிய மரியாதை வழங்கப்படுவதாகவும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Pakistan MP Asad Qaiser

அவர் பேசுகையில், “நான் யுஏஇ சென்றிருந்தபோது திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டது. அப்போது அங்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில், அமெரிக்கா மற்றும் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே ஓட்டலில் தங்குமிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டனர்” என்று தெரிவித்தார்.

இந்தியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பாகிஸ்தானியர்களை ஐக்கிய அரபு அமீரக அரசு அவமதித்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பேசிய அவர், “யு.ஏ.இ.யில் 15 லட்சத்துக்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் உள்ளனர். அங்குள்ள பாகிஸ்தானியர்களின் உழைப்பு அந்த நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

FLIGHT

அமெரிக்கா – ஈரான் மோதலின்போது பாகிஸ்தான் நடுநிலையாகச் செயல்பட்டபோதிலும், நமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு, உரிய விளக்கம் கேட்க வேண்டும்” எனப் பேசியிருக்கிறார்.

செய்தியாளர் - ராஜ்குமார்.ர