ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். பயங்கரவாதிகளின் இந்தச் செயல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ”பாகிஸ்தானை குறைசொல்வது வசதியான சாக்காகிவிட்டது” என அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சகர் குவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “பாகிஸ்தானுக்கு பஹல்காம் பயங்கரவாத சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை எப்போதும் ஆதரித்ததில்லை. அங்கு ராணுவமோ அல்லது காவல்துறையோ மக்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்து, அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்தால், பாகிஸ்தானைக் குறை கூறுவது ஒரு வசதியான சாக்காக மாறிவிட்டது. இந்திய அரசுக்கு எதிராக நாகாலாந்து, மணிப்பூர், சத்தீஸ்கர், காஷ்மீர் என பல இடங்களில் புரட்சிகள் நடக்கின்றன; ஆகவே இது அந்நிய ஊடுறுவலால் ஏற்பட்டவையல்ல. அனைத்தும் உள்நாட்டு எழுச்சியால் ஏற்பட்டவையே இந்துத்துவ சக்திகள் இந்தியாவில் சிறுபான்மையினரை, கிறிஸ்தவர்களை, பவுத்தர்களை அடக்குகின்றன; இதையெல்லாம் பார்க்கும் மக்கள் எதிர்வினையாற்றுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.