சீமா
சீமா  ani
உலகம்

எல்லை கடந்த காதல்: விசாரணை வளையத்தில் பாக். பெண் சீமா ஹைதர்! அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்!

Prakash J

எல்லை கடந்த காதலால் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண், இன்று எல்லா திசைகளில் இருக்கும் ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக நாள்தோறும் தவறாமல் இடம்பெற்று வருகிறார். சீமா ஹைதர் பற்றிய புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.

Sachin, Seema Haider

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ள சீமா ஹைதர், ஓர் உளவாளி எனக் குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, ’சீமா காதலுக்காக இந்தியா வர வேண்டும் என்றால், அவர் ஏன் சட்டவிரோதமான முறையை பின்பற்றினார்’ என்பதுதான் விசாரணையின் முதல் கேள்வியாக வைக்கப்படுகிறது. மேலும் அவர், பாகிஸ்தானிலுள்ள தீவிரவாதிகள் உதவியுடன் வந்திருக்கலாம் எனவும் புகார்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. சீமா, நேபாளம் வழியாக இந்திய எல்லைக்குள் நுழையும்போது பார்ப்பவர்களுக்குச் சந்தேகம் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்திய கிராம பாணியில் உடையணிந்து வந்ததாகவும், அதேபோன்று தன் குழந்தைகளுக்கு அணிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கிறார். அதிலும் அவர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடும் வீடியோக்களால்தான் தற்போது அதிகம் சந்தேகம் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. நேபாளத்திலிருந்து வந்ததாகச் சொல்லும் சீமா, அதற்கான எந்தவித ஆதாரங்களையும் காட்டவில்லை எனச் சொல்லப்படுகிறது. மேலும், சீமாவின் அண்ணன் ஆசிப், மாமா குலாம் அக்பர் ஆகியோர் பாகிஸ்தான் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகிறது. அத்துடன் சீமாவின் செல்போனில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது. இதனால்தான் அவர் ஓர் ஐஎஸ்ஐ உளவாளியாக இருப்பாரோ என்று போலீசாரால் சந்தேகப்பட ஒரு காரணமாக இருக்கிறது.

சச்சின், சீமா

இது தவிர அவர் பல பாஸ்போர்ட்களைப் பயன்படுத்தி இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்படி, அவர்மீது பல சந்தேகங்கள் எழுவதாலேயே சீமா விசாரணை அமைப்புகளின் கண்காணிப்பில் இருக்கிறார். தொடர்ந்து, அவரிடம் உத்தரபிரதேச மாநில தீவிரவாத தடுப்புப் படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அவர், இந்த ஆண்டு மட்டும் நேபாளத்துக்கு இரண்டு முறை வந்திருப்பதாகவும் அங்கு ஹோட்டல் ஒன்றில் சச்சின் மற்றும் சீமா இருவரும் போலி பெயரில் தங்கியிருந்ததாகவும், அவர்கள் பெரும்பாலும் அறையை விட்டு வெளியில் செல்லவில்லை எனவும், அப்படியே சென்றாலும், சீக்கிரமே திரும்பிவிடுவார்கள் எனவும் தகவல் வெளியாகி இருப்பதால், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தீவிர விசாரணையில் சீமா இருந்தாலும், அவர் ஐஎஸ்ஐயுடன் தொடர்பில் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லையாம். காரணம், அவர் விசாரணை அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு சாதுர்யமாகப் பதில் அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அவர்மீது மேலும் மேலும் சந்தேகம் வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து உத்தரப்பிரதேச சட்டம் ஒழுங்குப் பிரிவு போலீஸ் அதிகாரி பிரசாந்த் குமார், ”இது இரு நாடுகள் சம்பந்தப்பட்டது. எனவே, சரியான ஆதாரம் கிடைக்காத வரை இதுகுறித்து எதுவும் சொல்ல முடியாது. சீமா சிறையிலிருந்துவிட்டு ஜாமீனில் வந்திருக்கிறார். அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

விசாரணை குறித்து சீமா, “பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடன் எந்த தொடர்பும் இல்லை. நான் குற்றமற்றவர். உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” என்கிறார். ஆங்கிலப் புலமை குறித்த கேள்விக்கு, “சமூக ஊடகங்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்; மொழிப் புலமைக்குக் காரணம் திறமைதான்” எனப் பதிலளித்துள்ளார்.

Sachin, Seema Haider

சீமாவின் காதல் விவகாரம் இரு நாடுகளிடமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ’சீமாவை, உடனே தங்கள் நாட்டுக்குத் திரும்ப அனுப்ப வேண்டும்’ என பாகிஸ்தான் கோரிக்கை வைத்துள்ளது. அவரது கணவரும், சீமாவை அனுப்பும்படி இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளார். தவிர, இந்தியாவின் பழமையான அமைப்புகளும் சீமாவை பாகிஸ்தானுக்கு உடனே அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.

கணவர் குலாம் ஹைதர் ஜக்ரானி அழைப்பு விடுத்தது குறித்து சீமா, “அவர் உடல்ரீதியாக தம்மை வன்முறைக்கு ஆளாக்கினார்” என்று சொல்லும் அவர், “இனி, எங்களை தொந்தரவு செய்வதைத் தவிர்த்து சச்சினுடன் வாழ அனுமதிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சீமா, தன் கணவரைவிட்டு சில ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்ததாகச் சொல்லப்படுகிறது. பின்னர் 2020 முதல் ஆன்லைன் விளையாட்டு மூலம் உத்தரப்பிரதேச இளைஞர் சச்சினிடம் அறிமுகமாகி, அது நாளடைவில் காதலாகியது. அந்தக் காதலருடன் இணைந்து வாழ்வதற்காக தன் சொந்த வீட்டையும் விற்றுவிட்டு தனது 4 குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்தவர், இந்த சீமா ஹைதர். இங்குவந்து இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட சீமா, தன் கணவரை ’பாபா’ என அழைக்கத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

Seema Haider, Sachin

இதற்கிடையே சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் சீமாவும் அவரது காதலர் சச்சினும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதற்கிடையே இவ்விவகாரம், இரு நாடுகள் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், சீமா விசாரணை வளையத்தின் கண்காணிப்பில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவு நிறுவனத்துடன் சீமாவுக்கு தொடர்பிருக்கலாம் என்கிற செய்திகளால், இன்னும் பல்வேறு விஷயங்கள் வெளிவரலாம் என்று சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் தங்கவைக்கப்படுவாரா அல்லது பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவாரா என்பது விசாரணை அமைப்புகளின் அறிக்கைகளைப் பொறுத்தே தெரிய வரும்.