Terrorism Pt web
உலகம்

உலகளாவிய பயங்கரவாத குறியீடு.. முதலிடத்தில் பாகிஸ்தான்.. இந்தியாவின் இடம் என்ன?

சர்வதேச பொருளாதார மற்றும் அமைதிக்கான மையம் வெளியிட்டுள்ள உலகலாவிய பயங்கரவாத குறியீட்டில், 8.57 புள்ளிகளுடன் புர்கினா பாசோ நாட்டைப் பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இப்பட்டியலில் இந்தியாவின் இடம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

Premkumar S

2025 உலகலாவிய பயங்கரவாதக் குறியீட்டில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானில் 1,139 பேர் உயிரிழந்துள்ளனர், இது 2013-க்குப் பிறகு மிக உயர்ந்தது. இந்தியா 13-ஆவது இடத்தில் உள்ளது, 142 சம்பவங்கள் மற்றும் 100 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. IS அமைப்பு 17% தாக்குதல்களுக்கு பொறுப்பாக உள்ளது.

சர்வதேசப் பொருளாதார மற்றும் அமைதிக்கான மையம் (IEP) ஆண்டுதோறும், உலகின் 99.7 சதவீத மக்களை உள்ளடக்கிய 163 நாடுகளில் பயங்கரவாதத்தின் தாக்கத்தை ஆராய்ந்து உலகளாவிய பயங்கரவாத குறியீட்டினை (GTI) வெளியிட்டு வருகிறது. இதில், பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கை, உயிரிழப்புகள், காயமடைந்தோர் எண்ணிக்கை மற்றும் சொத்துச் சேதங்கள் போன்ற முக்கியமான அலகுகளாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில்தான், 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

global terrorism index

அதன்படி, 2011-ஆம் ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறது. இதற்கு, பாகிஸ்தான் தனது அண்டை நாடுகளுடன் கொண்டுள்ள சீர்குலைந்த உறவுகளும், தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (டிடிபி) மற்றும் பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) ஆகியவற்றின் அதிகரித்து வரும் வன்முறையுமே காரணமாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பாகிஸ்தானில் 2025-ஆம் ஆண்டில் பயங்கரவாதத்தால் 1,139 பேர் உயிரிழந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட 6 சதவிகிதம் அதிகமாகும். 2013-ஆம் ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாதம் தொடர்பான மரணங்களின் மிக உயர்ந்த எண்ணிக்கை இது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு அடுத்தடுத்த இடங்களில் புர்கினா பாசோ, நைஜர், நைஜீரியா, மாலி, சிரியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா 6.42 மதிப்பெண்களுடன் 13-ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 11ஆவது இடத்திலும், அமெரிக்கா 28-ஆவது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில், 142-க்கும் மேற்பட்ட பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்கள், 100-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் 118 காயங்கள் ஏற்பட்டிருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதம்

தொடர்ந்து, உலகம் முழுவதும் நடக்கும் அனைத்துத் தாக்குதல்களிலும் சுமார் 17 சதவீதத்திற்கு இஸ்லாமிய அரசும் (IS) அதன் துணை அமைப்புகளும் பொறுப்பாக இருப்பதால், 2026ஆம் ஆண்டிலும் அவையே மிகவும் கொடிய பயங்கரவாத அமைப்பாகத் தொடரும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.