பாகிஸ்தானில் மிகவும் பிரபல டிக்டாக்கராக இருந்தவர் ஆயிஷா கிலாமானா (சம்ஸூ பீபி). 28 வயதான இவரை, டிக்டாக்கில் சுமார் 1.3 மில்லியன் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில்தான், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தக்சிலா (Taxila) பகுதியில் தனது சகோதரி மற்றும் சகோதரருடன் காரில் சென்றுகொண்டிருந்தார், ஆயிஷா. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஆயிஷாவின் கழுத்தில் தோட்டா பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில், அவரது 15 வயது சகோதரி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிதிப் பிரச்னை காரணமாக இந்தக் கொலை நடந்ததாக ஆயிஷா குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர், இருப்பினும் அதற்கான நோக்கம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆயிஷாவின் தந்தை ஃபசல் சாஹிப்சாதா அளித்த புகாரின்படி, காஷிஃப் என்ற 'காஷி' என அடையாளம் காணப்பட்ட நபர் ஆயிஷாவைத் தொலைபேசியில் அழைத்து, வீட்டைவிட்டு வெளியே வருமாறு காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயிஷாவுக்கு கௌசர் மற்றும் ஜாவேத் என்ற ஷாஹீன் ஆகியோருடன் நிதிப் பரிவர்த்தனைகள் இருந்ததாகவும், பணத்தைத் திருப்பிக் கோரியதற்காக அவருக்கு மிரட்டல்கள் வந்ததாகவும் அவரது தந்தை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரிலேயே. அவர்கள் இருவரும் இந்தக் கொலையை ஏற்பாடு செய்திருக்கலாம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பாகிஸ்தான் காவல்துறை, சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளை வைத்து சிலரை கைது செய்து விசாரணை நடத்திவருகிறது. மறுபக்கம், பாகிஸ்தானில் பெண் டிக்டாக் பிரபலங்கள் சாகடிக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது.
கடந்த ஆண்டு, ஜூன் மாதம், இஸ்லாமாபாத்தில் காதலை நிராகரித்ததற்காக 17 வயது டிக்டாக் பிரபலமான சனா யூசுப், ஆண் நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அடுத்து, அதே ஆண்டில் ஜூலை மாதம், 16 வயதான டிக்டாக் பிரபலமான மெஹக் ஷெஹ்சாதி என்பவர் ராவல்பிண்டியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இது கெளரவக் கொலையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இதே மாதத்தில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுமீரா ராஜ்புத் என்பவர் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார். அவரை கட்டாயத் திருமணத்திற்கு வற்புறுத்தியதாகக் கூறப்படும் நபர்களால் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. அதேபோல், நடப்பாண்டில் கடந்த மார்ச் மாதம் ஆன்லைனில் அவுட்லோஃபாரா என்று அறியப்பட்ட டிக்டாக் பிரபலம் சனா ஜாவேத், இஸ்லாமாபாத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.