Pakistan Threatens Afghanistan With Open War Amid Istanbul Talks pt web
உலகம்

"முழு வீச்சில் போர் நடத்துவோம்.." பாக்., பகிரங்க மிரட்டல்.. இந்தியா போல் ஆப்கான் எடுத்த முடிவு

ஆப்கானிஸ்தானுடன் முழு வீச்சில் போரை நடத்த வேண்டி இருக்கும் என்றும் தங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

PT WEB

பாகிஸ்தான் ஆப்கான் இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளது. அதாவது அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் ஆப்கானிஸ்தானுடன் முழு வீச்சில் போரை நடத்த வேண்டி இருக்கும் என்றும் தங்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

கடந்த சில காலமாகவே பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே மோதல்கள் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்கியதால் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டது. அப்போது கத்தார், துருக்கி நாடுகள் மத்தியஸ்தம் செய்தன. கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

தற்போது, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன. இஸ்தான்புல்லில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் வெடிக்கும் என ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அந்நாட்டின் உள்துறை துணை அமைச்சர் ரஹ்மத்துல்லா முஜிப் தலைமையிலான குழு இந்த அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் தரப்பில், இரு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஆப்கானிஸ்தானுடன் போரில் ஈடுபடுவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை" என கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலை ஒரு அமைப்பு மேற்பார்வையிடுவதை பாகிஸ்தான் விரும்புவதாகத் தெரிகிறது. அதாவது ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இரு நாடுகளும் அமைதி ஒப்பந்த விதிமுறைகளைப் பின்பற்றுகிறதா என்பதைச் சரிபார்க்க துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் இணைத் தலைமையின்கீழ் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது என்று தகவல் வருகின்றன.

Afghanistan new dam plan could cut water supply to Pakistan

மேலும், "ஆப்கான் மண்ணில் இருந்து பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தும் தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பின் அச்சுறுத்தலை அகற்ற ஆப்கான் உறுதிமொழிகளைக் கொடுக்க வேண்டும். அதைத் தான் பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது" என்று அந்நாட்டு ஊடகங்களால் கூறப்பட்டுள்ளது.

துராண்ட் கோடு பகுதியில் கடந்த சில வாரங்களாகப் பல மோதல்கள் ஏற்பட்டதால், ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் 9ம் தேதி ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி இந்தியா வந்திருந்த நிலையில், சரியாக அப்போது முதல் நாளிலேயே ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் தாக்குதல்கள் நடத்தியது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் அதற்குப் பதிலடி கொடுத்தது.

இது ஒரு பக்கம் இருக்க.. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் இன்னொரு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. அதாவது இந்தியா எப்படிச் சிந்து நதி நீர்த் திட்டத்தில் இருந்து விலகியதோ.. அதேபோல ஆப்கானிஸ்தானும் தங்கள் குனார் நதியில் விரைவில் அணைகளைக் கட்டும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது பாகிஸ்தானுக்குச் செல்லும் நீரைக் குறைக்கும். இந்தநிலையில் தான் பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் தனது கடுமையான எச்சரிக்கையை தெரிவித்துள்ளார்.