பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பு, சிந்து (Sindh) மாகாணத்தில் தங்களின் இருப்பை அறிவிக்கும் வகையிலான புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்லாத்தின் கொடி, சிந்து மண்ணில் மீண்டும் ஏற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) அமைப்பு, சிந்து மாகாணத்தில் தங்களின் இருப்பை அறிவிக்கும் வகையிலான புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆயுதம் ஏந்திய நபர், சிந்துவின் ஒடுக்கப்பட்ட மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். ”சிந்துவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நான் ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தானை ஆதரியுங்கள்; வெகுகாலத்திற்கு முன்பு முஹம்மது பின் காசிம் சிந்துவுக்கு வருகை தந்து ராஜா தாஹிரைத் தோற்கடித்த பிறகு ஏற்றிய அதே இஸ்லாத்தின் கொடி, சிந்து மண்ணில் மீண்டும் ஏற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. முகமது பின் காசிம் போன்ற புதல்வர்கள் மீண்டும் சிந்து மண்ணை நோக்கித் திரும்புகிறார்கள். இஸ்லாத்திற்காக முன்னேறுங்கள். இஸ்லாத்திற்காக மடியுங்கள்" என அவர் இறுதியில் வேண்டுகோள் விடுக்கிறார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் அந்தக் காணொளியை, ’சிந்துவில் TTP தனது இருப்பை அறிவிக்கும் செயல்’ என விவரித்துள்ளனர்.
முன்னதாக, TTP தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து சிந்து மாகாணத்திற்குள் ஊடுருவி வருவதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது. வழக்கமாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் ஆகிய எல்லைப் பகுதிகளில் மட்டுமே தீவிரமாக இயங்கி வந்த TTP, தற்போது பாகிஸ்தானின் முக்கியப் பொருளாதார மையமான கராச்சி அடங்கிய சிந்து மாகாணத்திற்கும் தங்களின் அமைப்பை விரிவுபடுத்துவது அந்நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
அதேநேரத்தில், இந்த வீடியோ வெளியாவதற்கு முன்னதாகவே, சிந்துவின் கராச்சி நகரில் TTP அமைப்பைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களை பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (CTD) கைது செய்துள்ளது. எனினும், TTP தாலிபன்கள் சிந்து மாகாணத்திற்குள் முதல் முறையாக நுழையவில்லை எனவும், அதற்கு முன்பே அவர்கள் நுழைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. TTP பொதுவாக, ’பாகிஸ்தான் தாலிபன்’ என்று அழைக்கப்படுகிறது. காரணம், இது 2000-களின் நடுப்பகுதியில் தோன்றிய, பாகிஸ்தானை மையமாகக் கொண்ட இஸ்லாமியப் போராளிக் குழுக்களின் ஒரு குடை அமைப்பாகும். அதேநேரத்தில், இது ஆப்கானிஸ்தான் தாலிபனுடன் கூட்டணி வைத்திருப்பதாகக் கூறப்பட்டாலும், அதிலிருந்து வேறுபட்டது எனச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், பலுசிஸ்தான், தாலிபன் வருகை, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிர்சனைகளால் பாகிஸ்தான் விழிபிதுங்கி நிற்கிறது.