உலகம்

குல்பூஷன் தாயார், மனைவிக்கு விசா வழங்க பாக். நடவடிக்கை

குல்பூஷன் தாயார், மனைவிக்கு விசா வழங்க பாக். நடவடிக்கை

webteam

தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவ் தாயார் மற்றும் மனைவிக்கு விசா வழங்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.

உளவு பார்த்ததாகக் கூறி இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான், மரண தண்டனை விதித்துள்ளது. இந்த பிரச்னை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற சர்வதேச நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையில், பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை சந்திக்க அனுமதி கோரி அவர் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி ஜாதவின் குடும்பத்தினருக்கு விசா வழங்க டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் ஜாதவ் தாயார் மற்றும் மனைவிக்கு விசா வழங்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. அவர்கள் இருவரும் பாகிஸ்தான் வர விசா கோரி விண்ணப்பித்திருப்பதை அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் உறுதி செய்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு விசா வழங்கப்பட இருப்பதாகவும் முகமது ஃபைசல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வரும் 25 ஆம் தேதி அவர்கள் ஜாதவை சந்திப்பார்கள் என்றும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.